Saturday, June 27, 2009

“உறங்காதகண்மணிகள்’

உறங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவவெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப் பட்டிருக்காது.

விடுதலைப்புலிகளின் முன்னணிராணுவ புலனாய்வுப் பிரிவின் பிள்ளைகளுக்குப் பெயர்தான் “உறங்காதகண்மணிகள்’. நிலவு காயும் நாட்கள்தான் இவர்களது தீபாவளி. கனத்த இரவுகளில் இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் திறக்கும். காற்றோடு காற்றாய்ப் போவார்கள். கணப்பொழுதில் வெட்டி மறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.

புலிகள் படைத்த ராணுவ வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது துல்லியமான திட்டமிடல். பிசிரற்ற திட்டமிடலுக்கு ஆதாரத் துணையாய் இருப்பது “உறங்காத கண்மணிகள்’ கொண்டுவரும் உளவுத் தரவுகள். எழுத எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை நாம் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அதிசயங்களில் ஒன்று.

ஒரு ராணுவ முகாமை தாக்கி அழிக்கும் முடிவினை தலைமை எடுத்த பின்னர் முதலில் புறப்படுவது உறங்காத கண்மணிகள். தாக்குதல் தொடங்குவதற்கு ஓராண்டு, ஆறேழு மாதங்களுக்கு முன்னரே அவர்களது பயணம் தொடங்கும். பெரிய முகாமென்றால் ஆயிரத்திலிருந்து, ஐந்தாயிரம் ராணுவத்தினர் வரை இருப்பார்கள்.. முட்கம்பி வேலிகள், கண்ணிவெடி வெளிகள், கண்காணிப்புகோபுரங்கள், ஐம்பது மீட்டருக்கு ஒரு காவல் அரண் இவை அனைத் தையும்கடந்துதான் ஓர் இரவுப்பொழுதில் ஊடுருவி உள் நுழைவார்கள்.

உள் நுழைந்தபின் அந்த முகாம் குறித்த முழு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுவார்கள். எங்கெல்லாம் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன, பீரங்கித் தளம் எந்த இடத்தில் இருக்கிறது, மின் இணைப்புகளுக்கான தலைமையிடம் எங்கிருக்கிறது, முன் அரணில் எத்தனை ராணுவத்தினர் நிற்கின்றனர், அவர்கள் என்ன ரக துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என அத்தனை தகவல்களையும் சேகரித்து முடிக்க பல வாரங்கள் ஆகும். எதிரியின் கண்களில் படாமல் அவர்களது நரம்பு மண்டலத்திலேயே குடியிருந்து இத்தனை நாட்கள் எப்படி அவர்களால் இயங்க முடிந்ததென்பதை அறிந்தால் நீங்கள் உங்களையுமறியாமல் வியந்து தலைபணிவீர்கள்.

இரவுகளில்தான் இவர்கள் இயங்குவார்கள். இயங்கவும் முடியும். பகலெல்லாம் இவர்கள் எங்கு பதுங்கியிருப்பார்கள் தெரியுமா? இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்தும் கக்கூஸ் கழிவுகள் வந்திறங்கும் மலக் கிணறுகளில், ஆயிரம், ஐந்தாயிரம் ராணுவத்தினர் இருக்கும் மலக்கிணறு பற்றி எழுதவே நாற்றம், அசிங்கமாக அருவருக்கிறது. நினைக்க குமட்டு கிறது. அக்கிணறுகளுக்குள் நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்கியிருப்பதென்றால் எந்தளவுக்கு இலட்சிய உறுதியும், சுயம் அறுத்த அர்ப்பணமும் வேண்டுமென எண்ணிப்பாருங்கள். இதனை எழுதுகின்றபோதே அந்தக் கண்மணிகள் காவி யங்கள் படைத்த தமிழீழத் திசைநோக்கி விழுந்து தொழவேண்டும்போல் உணர்வெழுகிறது.

எதிரியின் பாசறைகளது கழிவுக் கிணறுகளில் பகல் முழுதும் நின்று சாய்ந்துறங்கி இரவெலாம் கண்விழித்துப் படம்பிடிக்கும் இவர்கள், ஊடுருவி உள்ளிருக்கும் நாட்களில் வாழ்வது வைட்டமின் மாத்திரைகளில். குடல்வற்றி சுருங்கி ஒட்டிப் போகாதிருக்கவேண்டி பிஸ்கட்டுகளும் ரஸ்க்கும் கணக்கு பார்த்துச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சிங்களம் பேசும் லாவகமும், கூடவே சுட்டித்தனமும் கொண்ட கண்மணிகளென்றால் நள்ளிரவுவரை வேவுத் தகவல்கள் சேகரித்துவிட்டு சிலமணிநேரம் ராணுவத்தினரின் கூடாரங் களிலேயே படுத்துறங்கி வேடிக்கை செய்வதும் உண்டாம். இயக்கம் இட்ட பணி முழுமையாய் முடிந்தபின் உள்துழைந்ததுபோல் ஓர் இறுக்கமான இரவில் வெளியேறுவார்கள். பிடிபட்டு கொடும் சித்ரவதைகளுக்குப்பின் கொல்லப்படும் துயரங்களும் நடப்பதுண்டு.

உறங்காத கண்மணிகள் கொண்டுவரும் தரவுகளின் அடிப்படையில் எதிரியின் முகாம் போலவே ஒன்றை கட்டியெழுப்பி உருவாக்கு வார்கள் புலிகளின் பயிற்சிப் பிரிவினர். முன்பொரு கட்டுரையில் தமிழீழ வரலாறு தந்த ஈடு இணையற்ற பயிற்றுவிப்பாளர் கடாஃபி அவர்களை கெஞ்சி மன்றாடி பயிற்சி முகாம் ஒன்றினைப் பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டி ருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். எந்த இடத்தில் என்ற விபரக் குறிப்பை இங்கு தவிர்க்க விரும்புகிறேன்.

பயிற்சி முகாம் நுழைவாயிலில் அவர்கள் பொறித்து வைத்திருந்த இரு வசனங்கள் மறக்க முடியாதவை.. வாயில் முகப்பில் அவர்கள் எழுதியிருந்தது: “”கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.” எத்துணை பெரிய உண்மையை மின்னிடும் சொல்லாடல். கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை. காட்டுவெளி போன்ற புதர் பரப்பில் துண்டோ, பாயோ இன்றி தரையில் படுத்துறங்க வேண் டும். பாம்பு வரலாம், தேள் கடிக்கலாம், எதுவேண்டுமானாலும் தங்கள் மீது ஊரலாம். நள் ளிரவு 12 மணிக்குத் தான் படுத்திருப் பார்கள். மூன்று மணிக்கு விசில் ஊதப்படும். மின்னல் வேகத்தில் துடித்தெழுந்து ஆயுதத்துடன் முடை நாற்றமெடுக்கும் இடுப்பளவு சாக்கடைக்குள் குதித்து நிலை யெடுக்க வேண்டும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அசையாது அப்படியே நிற்கவேண்டும். உடலைவிட மன உறுதிக்குத்தான் இங்கு பயிற்சி. பயமும், பணிந்து போகும் குணமும், தாழ்வு மனமும் இயல்பிலேயே கொண்டதொரு இனத்தினது மரபணுவில் போர்க் குணம் ஏற்றிப் புடமிடும் பாசறை!

பயிற்சி முகாம் நுழைவாயிலில் பொறித்து வைத்திருந்த பிறிதொரு வசனம்.
“”ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.” உபயம் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார்கள்..

“”இந்த என் கையாலேயே எங்கள் செல்வங்களை ஏழு போராளிகளை நான் கொன்றிருக்கிறேன்” என்று கடாஃபி சொல்லும்போதே அவரது உடல் அதிர்ந்து கண்கள் ஒருகணம் துயரத்தில் ஆழ்ந்ததை கவனித் தேன். “உறங்காத கண்மணிகள்’ கொண்டுவரும் தகவல்களின் அடிப்படையில் எதிரி முகாமையே “டம்மி’ உருவாக்குவார்களென்று சொன்னே னல்லவா? ஆனால் பயிற்சியோ நிஜ சண்டையாக இருக்கும்.. புலிகளே இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் சிங்கள ராணுவம்போல் நிலையெடுப்பார்கள்.

உதாரணமாக, உறங்காத கண்மணிகள் தந்த தகவலின் படி எதிரி முகாமின் முன் அரங்கில் மூன்று அரண் நிலை களும் அவற்றின் பின் முப்பது ராணுவத்தினர் ஏ.கே.47 துப்பாக்கிகளோடும் நிற்கிறார்களென்றால் அவ்வாறே இங்கும் புலிகள் அதே ஆயுதங்களோடு நின்று சுடுவார் கள். நிஜமாகச் சுடுவார்கள். அதனை எதிர்கொண்டு எப்படி அந்த அரண் நிலைகளை தாக்கி கைப்பற்றுவதென்பது தான் பயிற்சி. மின்னல் மழைபோல் பீறிப் பறந்து வரும் துப்பாக்கி ரவைகளின் தூரம்- வேகம் இவற்றை கணநேரத் தில் கணித்து தலையை தாழ்த்தியும் வலது இடது புறங்களில் வெட்டிச் சரிந்தும் தரையில் பொத்தென விழுந்து படுத்தும் அவர்கள்களமாடும் காட்சியினை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்குகிற வலு உங்களதும்
எனதும் இதயங்களின் ரத்தக்குழாய்களுக்கு நிச்சயம் இல்லை.

கடாஃபி சொன்னார் : “”என்ட கையாலெ ஏழு போ ராளிகள் செத்தது தாங்கஏலா வேதனைதான். ஆனா அத்தகைய பயிற்சியாலெ நிஜ சண்டையில் எழுநூறு போராளிகளின் உயிரை நாங்கள் பாதுகாக்கிறோம்” ஆம் கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.

இதுவரை எழுதிவிட்டு இரவு 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலைவரை உறக்கம் வரவில்லை. குவார்ட்டர், பிரியாணி, கைப்பணம் இல்லாமல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக்கூட தொண்டர்கள் இல்லை என்ற அரசியல் களப்பணி காட்சியை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கண்ட எனக்கு உறங்காத கண்மணிகளின் நினைவு உயிரைப் பிழிந்தது. முன்பொருமுறை நான் குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களுக்குச் சென்றவர்களுக்கும், ஜிகாத் போருக்குப் போனவர்களுக்கும் மரணத்திற்குப் பின் பரலோகப் பரிசு இருந்தது.

ஆனால் தமது தமிழ் தலைமுறைகள் ஒருநாள் விடுதலைபெற்று சுயமரியாதையுடன் தமது தாயகத்தில் வாழ்வார்கள் என்பதைத் தவிர இந்த உறங்காத கண்மணிகளுக்கு வேறென்ன இருந்தது? இத்துணை அர்ப்பணமும், தியாக உணர்வும் கொண்டு வரலாற்றுப் பேரதிசயமாய் எழுந்த ஒரு விடுதலை இயக்கத்தை உலகின் அத்தனைபேரும் சேர்ந்து முற்றுகையிட்டு, வதைத்து தகர்த் திட தமிழ் இனம் என்னபாவம் செய்தது… நாமெல்லாம் கையாலாகாத வர்களாய் பார்த் திருக்கவல்லவா இக் கொடுமை நடந்தேறி யது… என்றெல்லாம் எண்ண மனம் உண்மையிலேயே ஆற்றுப் பெற முடியாமல் தவிக்கிறது.

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பில் இருந்தபோது போராளி ஒருவர் பகிர்ந்து கொண்ட பிறிதொரு பதிவு இதனை படிக்கிற உங்களால் மரணம்வரை மறக்க முடியாத ஒன்றாய் இருக்கும். பெருமழை பெய்த ஒரு நாள். இடத்தின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. கஞ்சிக்குடிச்சி ஆறு என்று நினைக்கிறேன். சிறியதோர் ராணுவ முகாம் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டு திரும்புகிறார்கள் 17 போராளிகள். திரும்பி வரும்வேளை அக்காட்டாற்றில் பெருவெள்ளம். கடக்க முடியாதென்ற நிலை. ஆற்றின் அப்பக்கமாய் இருந்த தம் தளத்திற்கு “வாக்கி-டாக்கி’யில் பேசி கயிறு கொண்டு வரச்செய்து எப்படியோ இருபுறமும் இழுத்துக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டே ஆற்றைக் கடக்கிறார்கள். இவர்கள் நட்டாற்றை கடக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டு வந்த சிங்கள ராணுவத்தினர் கயிறை அறுத்துவிட 17 பேரையும் பெருவெள்ளம் அடித்துச் செல்கிறது. ஆற்றங்கரைகளை அறிந்தவர்களுக்குத் தெரியும், கரையோரங்களில் மரமும் இல்லை- செடியும் இல்லை என்பது போன்ற ஒருவகை புதர்கொடி இருப்பது. அப்படியொரு புதர்கொடியை ஒரு போராளி பற்றிப் பிடித்துக்கொள்கிறார். அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துவரும் இன்னொரு போராளியும் அதே புதர்கொடியை பிடிக்க எத்தனிக்கிறார். முதலில் அக்கொடியை பிடித்து நின்ற போராளிக்குத் தெரிகிறது இரண்டு பேரையும் தாங்கும் வலு அந்த புதர்கொடிக்கு நிச்சயம்
இல்லையென்பது. இரண்டாவது வந்த போராளி கொடியைப் பிடிக்க கையை நீட்டவும் முதற்போராளி, “”நீ பத்திரமா போய் சேர்ந்திடப்பா” என்று சொல்லிக்கொண்டே தன் கையை எடுத்து பெருவெள்ளத்தோடு போகிறார். எங்கோ கடலுக்குள் போன அவரது உடல்கூட கிடைக்கவில்லையாம்.

தமிழர்களே, நண்பர்களே! கேளுங்கள், உரத்துச் சொல்கிறேன். அருட்குருவாகிய நான் அந்த புதர்கொடியினை முதலில் பிடித்தவனாய் நின்றிருந்தால் நிச்சயம் இன்னொருவருக்காய் என் கைகளை எடுத்திருக்கமாட்டேன். நம்மில் பைபிள், குர்ரான், நாயன்மார்கள், ஆழ்வார் களையெல்லாம் படிக்கிற எத்தனைபேர் இத்தகைய தியாகத்திற்குத் தயாராகியிருப் போம் என ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். கண்கண்ட எங்கள் தெய்வீகச் செல்வங்களே நீர் வாழ்ந்த திசை நோக்கி கரம் கூப்பினோம்.

- நக்கீரன்

இலங்கை அரசின் இன அழிப்பு சதிக்கு இந்திய வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை போகிறார்

Seeman

இலங்கை அரசின் இன அழிப்பு சதிக்கு இந்திய வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை போகிறார் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழில் அவர் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை:

"ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!" மகிந்த ராஜபக்சவிடம், ஜூன் 9 ஆம் நாளன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகளாம் இவை.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளை நிலங்களை எதற்கும் உதவாத தரிசு நிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை லட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளியவர் என்ற விமர்சனங்களுக்கு உள்ளான எம்.எஸ்.சுவாமிநாதன் இப்படிச் சொல்லி இருந்தால் அது மிகப் பெரிய அவலம்! சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமேயானால், ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டது உண்டு.

அந்த 'அறிவார்த்தமான' வாக்கியத்தை முதன் முதலில் கூறியவர் டொக்டர் ஜோசப் மெங்கெல் [Joseph Mengele] என்ற ஜெர்மானியர். பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை மேதைமை படிப்புக்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர்.

ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார். 1943 ஆம் ஆண்டு, மே 24 ஆம் நாளன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்ரவதைக் கொட்டடியில் இருந்த 'நாடோடிகளுக்கான முகாமில்' [Gypsy Camp] மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டைப் பிறப்புக்களின் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவருடைய பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள்.

அவருடைய ஆய்வுக்காக சுமார் 1,500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர். தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார். இதனைப் பல மாதங்கள் தொடர்வார்.. 'மெங்கெல் மாமா... மெங்கெல் மாமா...!' என்று குழந்தைகள் அவரை வளைய வரும்.

திடீரென ஒரு நாளில், அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார். மயக்கம் ஏற்படுத்தும் சாக்லெட்டைக் கொடுப்பார். மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இதயத்தில், அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசி மூலம் செலுத்துவார். குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் அவயவங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார்.

இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார்.

குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக பல்வேறு இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் அவர்களின் கண்களுக்குள் செலுத்திப் பார்த்தார்.

இப்படிப்பட்ட கொடூர ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்ரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில், அவருடைய உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்தான்...

'ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!' என்பது.

எம்.எஸ்.சுவாமிநாதன் துணையுடன் இலங்கை அரசாங்கம் நடத்தவுள்ள 'பரிசோதனை'யும் யூத இனத்துக்கு மெங்கெல் செய்த கைங்கரியம் போன்றதுதானா... புதிய விவசாயப் பரிசோதனையில் வன்னிப் பெருநில மக்கள் எலிகளாகப் பயன்படப் போகிறார்களா என்ற அச்சம் எழுகிறது!

வட ஈழ மக்களும் அவர்களின் அவலமும்...

இலங்கை ராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப் போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த-அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டு விடுகிறது.

2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது. அப்போது வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்து 3 ஆயிரம் ஆகும்.

போர் முடிந்த இன்றைய நாளில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது. 35 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை.

மே 27 ஆம் நாளன்று அளிக்கப்பட்ட ஐ.நா. சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி, அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 77 ஆயிரம் ஆகக் குறைந்திருந்தது.

ஜூன் 15 ஆம் நாளன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 என மேலும் குறைந்திருந்தது.

மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27 ஆயிரத்து 498 பேர் காணாமல் போயுள்ளனர் என்பதுதானே பொருள்?

மே 23 ஆம் நாளன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா. சபையின் தலைவர் பான் கீ மூன் சந்தித்தபோது, 'என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை!' என்று பெரிதும் வருந்தினார்.

சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா, 'இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்!' என்றார்.

'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்!

இந்த நிலையில்... மே 7 ஆம் நாளன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது.

19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவுக்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும் சகோதரரும் இனவாத கருத்துகளை அள்ளி வீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்ச தலைவராக நியமிக்கப்பட்டார். மீதமுள்ள 18 பேரில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டு வீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளிய இலங்கை ராணுவத்தின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவும் ஒருவராவார்.

உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவர்களாகவும் (இதில் இலங்கை ராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம்) 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார். வன்னிப் பெரு நிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்துக்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர்தான் 'வடக்கின் வசந்தம்'.

ஒரு இஸ்லாமியரைத் தவிர்த்து, வேறு தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

'போல்போட்' திட்டம்...

'அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாதத் தொடக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க... நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இலங்கை அதிபரின் கண்ணுக்குத் தெரிந்தார்.

ஜூன் 9 ஆம் நாளன்று ராஜபக்சவை சந்தித்து ஆலோசித்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போது, 'வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்' என ராஜபக்ச, சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, 'வடக்கின் வசந்தம்' திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆண்களே இல்லாத ஈழத் தமிழினத்தை உருவாக்க சதி...

'போரில் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்ட சேதம் காரணமாக, வேலை செய்யக் கூடிய வலுவுடைய ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. வேளாண் தொழிலுக்குப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வேளாண் ஆராய்ச்சியும் கல்வியும், அவற்றின் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பெண்களை மனதில் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் சுவாமிநாதன். ஆண்கள் இல்லாத தமிழினத்தை ராஜபக்ச உருவாக்கியுள்ளார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரத் தகவல் வேண்டும்?

'வவுனியாவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவன வளாகத்திலிருந்து இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் இலங்கையின் வேளான் விஞ்ஞானிகளுடனும், விவசாயிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் முகாம்களில் உள்ளவர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

அக்டோபர் மாதம் விதைப்புக் காலமாகும். எனவே வேளாண் பயிற்சி, திறன் மேம்படுத்துதலுக்கான செயல்களை ஆகஸ்டில் தொடங்கியாக வேண்டும். மண் பரிசோதனை ஊர்திகள், விதைகள், ஊட்டச் சத்துக்கள், கருவிகள் ஆகியவை அனைத்து ஊர்களுக்கும் செப்டம்பருக்குள் சென்றடைய வேண்டும்' என்றும் கூறியுள்ளார் சுவாமிநாதன்.

வேளாண் விஞ்ஞானியின் ஆர்வமும், அதன் பின்னாலிருக்கிற இலங்கை அரசின் அவசரமும் கம்போடியாவை ஆண்ட கொடுங்கோலன் போல்போட் காலம், இலங்கையில் மீண்டும் திரும்பிவிடுமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.

கம்போடிய கண்ணீர்!


1975 ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்போடிய நாட்டின் அதிகாரத்தை போல்போட் (சலோத் சார்) தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. நகரங்களில் இருந்த அனைவரும் கிராமப்புறங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பொதுமையாக்கப்பட்ட பண்ணைகளில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நாட்டின் வளர்ச்சிக்காக நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்தப் பணிகளின்போது மட்டுமே சுமார் 17 லட்சம் மக்கள் மடிந்து போனார்கள். அதாவது, கம்போடியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21% இல்லாமல் போய் விட்டார்கள்.

வன்னிப் பெருநில மக்களின் துன்பமோ இதை விடப் பெரிது. ஏற்கெனவே கடந்த 13 மாதங்களில் அவர்களில் 35% காணாமல் போயிருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் முகாம்களில் உள்ள பெண்களையும், சிறுவர்களையும், வயோதிகர்களையும் கிராமப்புறங்களில் குடியமர்த்தி... எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரால் கடுமையாக வேலை வாங்குவதற்கு ராஜபக்ச திட்டம் வகுக்கிறார்.

உறவுகளை இழந்து பட்டினியாலும் நோயாலும் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்தப் பெண்களால், ஆகஸ்ட் மாதம் வேளாண் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு செயல்களில் எப்படிக் கலந்து கொள்ள முடியும்?

இழப்புகள், மன உளைச்சல்கள், இடப்பெயர்வுகளால் ஏறத்தாழ நடைபிணங்கள் ஆகிவிட்டிருக்கும், பெண்களின் எஞ்சிய உயிரையும் பறிப்பதற்கான மாற்று ஏற்பாடாக இதை ஏன் கருதக் கூடாது?

போருக்கு உதவி செய்து தமிழினத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்த இந்தியா... இன்று மிச்சமிருக்கும் தமிழர்களையும் தந்திரமான ஒரு திட்டத்தின் மூலம் கொன்று குவிக்க முயலும் இலங்கைக்கு 500 கோடி ரூபாயை அளிக்கப் போகிறதா?

'வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் நோக்கம் ஈழத்தில் பயிர் பண்ணுவது அல்ல... இன்னும் மிச்சம் இருக்கும் தமிழர்களின் உயிர்களை மெள்ள மெள்ளக் கொல்வதுதான்' என்ற அச்சத்தைப் போக்குவதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறார்? என கேள்வி எழுப்பினார் சீமான்.


Friday, June 26, 2009

ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம்...ஜம்புநாதன்.




இந்தியத் திருநாட்டின் தொன்மைக்கும் பெருமைக்கும் உறுதுணையானவற்றுள் வேதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் வடமொழியில் அமைந்தவை. வேத ஆராய்ச்சியிலும் வேத மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்ட அறிஞர்கள் பற்பலராவர். அவர்களுள் செங்காவிச் சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர் வேதம் குறித்துப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார்.

""முழுமை நிறைந்த பண்பட்ட இலக்கியம் தொன்மைமிக்க வேதங்களாகும்'' என்பது அவர்தம் கருத்து. "கலைமகளுக்கு வேதம் திருவிழி', "இந்தியத் தாயோ அதனைத் தம் நாவினில் தாங்கியுள்ளாள்' என்று பாரதியார் கருதுகிறார். அதனால்தான், ""வேதத்திருவிழியாள்'' என்று கலைமகளையும், ""நாவினில் வேதமுடையவள்'' என்று இந்தியத் தாயையும் பாடிப்பரவுகிறது அவரது கவியுள்ளம்.

உலகியல் வெளிப்பாடுகளை ஆன்மிகத் தேட்டத்தோடு கவித்துவமாகச் சொல்லிச்செல்லும் வேத இலக்கியத்தின் நுட்பமறிந்த பாரதியார், அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்து "வேதரிஷிகளின் கவிதைகள்' என்று தமிழில் தந்திருக்கிறார் என்பது பலரும் அறிந்த செய்தி. அதேசமயம் கிட்டத்தட்ட, அதே காலகட்டத்தில், நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார் என்பது நாம் பலரும் அறிய வேண்டிய செய்தி.

திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள மணக்கால் என்னும் ஊரில் மணக்கால் இராமசுவாமி அவதானிகள்-இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு 23-ஆம் தேதி பிறந்தார்.

வட இந்தியாவில், மும்பையில் வசித்துவந்த ஜம்புநாதன், தயானந்த சுவாமிகள் மும்பையில் நிறுவிய ஆரிய சமாஜத்தால் ஈர்க்கப்பட்டார். ஜாதி கடந்த சமுதாயத்தைக் காணவும், வேதத்தை விரிவான நோக்கில் விளங்கிக் கொண்டு, உலகினர்க்குச் சிறப்பாக, தமிழர்களுக்கு விளக்கவும் விரும்பிய ஜம்புநாதனுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் சுவாமி தயானந்தர்.

அந்த ஈர்ப்பில்தான் சுவாமிகள் இந்தியில் எழுதிய ஆர்ய சமாஜம் தொடர்பான விளக்கங்கள் நல்கும் "சத்யார்த்த பிரகாசம்' என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், வடமொழி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த ஜம்புநாதன் தம் தாய்மொழியான தமிழைப் பெரிதும் நேசித்தார். அதன் அடையாளங்களுள் ஒன்றுதான் அவர் மும்பையில் வாழும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக முதல் முனிசிபல் தமிழ் தொடக்கப்பள்ளியை நிறுவியது.

இந்தியநாட்டு ஆன்மிகச் செல்வங்களான வேதங்கள் சாதி பேதமின்றி எல்லாத் தமிழர்களையும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நான்கு வேதங்களையும் தமிழில் தந்திருக்கிறார். அவற்றுள் ரிக் வேத மொழிபெயர்ப்புக்காக மட்டும் முப்பது ஆண்டுகள் உழைத்திருக்கிறார். ரிக் வேதத்தின் முதல் பாகம் அவரது மறைவுக்குப் பின் மனைவி சாந்தி ஜம்புநாதனால் வெளியிட்டப்பட்டிருக்கிறது. வேதத்தைத் தமிழ் செய்ததோடு உபநிஷதக் கதைகளையும் தமிழாக்கியிருக்கிறார்.

""அவர் மொழிபெயர்ப்புக்கு உரைநடையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் சமூக அடித்தளத்தில் உள்ளவர்களான தாழ்த்தப்பட்டோர் வேதங்களை அறிய வேண்டும் என்பதுதான். மற்றொன்றையும் நினைவு கூர்வது அவசியமாகும். அவர், மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் மூலத்தை சிதைக்காது எக்கருத்தையும் தம் விருப்பம் போல் சேர்க்காது, குறைக்காது வேதம் கூறுவதை அப்படியே தருகின்றார்'' என்று வேத ஆய்வாளர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.

வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். சென்னையில் "ஜம்புநாத புஸ்தக சாலை' என்னும் பதிப்பகம் அமைத்து அதன்வழி தமது மொழியாக்கங்களை வெளியிட்டிருக்கிறார். வேதம் அனைவருக்கும் பொதுவானது என்று கருதும் சான்றோர்கள் அதனை அனைவரும் அறியும்படி தம்மாலான பணிகளைச் சிறப்புறச் செய்துவந்த அக்காலத்தில், அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்று சேரவேண்டும் என்று கருதியவர் ஜம்புநாதன். தமது "சதபதபிராமணம்' என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார் ஜம்புநாதன். மிகுந்த உணர்வோட்டத்தோடு அவர் எழுதிய கீழ்க்காணும் அர்ப்பண உரை காத்திரமானது; முற்போக்கானது.

""ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்......... இந்நாடு, பூலோகமுழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''

1974-ஆம் ஆண்டுவரை வாழ்ந்த ஜம்புநாதன், தமிழில் 16 நூல்களையும், ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் படைத்தளித்திருக்கிறார். எனினும் இவர் பாரதியார்தம் வேத மொழிபெயர்ப்பான "வேதரிஷிகளின் கவிதைகள்' பற்றி அறிந்தவராகத் தெரியவில்லை என்று குறிப்பிடும் பாரதி ஆய்வாளர் பெ.சு.மணி, இந்த வரலாற்றைச் சிறப்பாகவும் செறிவாகவும் தமது "பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.

சுமார் எழுபத்தி எட்டு ஆண்டுகள் வேதம் தமிழ் செய்யும் வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜம்புநாதன் 1974-ஆம் ஆண்டு உலக வாழ்வை நீத்தார். அவரது தமிழ்த்தொண்டு வரலாற்றுச் சிறப்புக்குரியது.

மும்பையில் இருந்துகொண்டு தம் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டும், தீண்டாமையை எதிர்த்து ஜாதிக்கும் அப்பால் வேதங்களைக் கொண்டுசெல்ல அவர் மேற்கொண்ட முயற்சியும் சாதாரண விஷயமா என்ன?

""ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தனியொருவராகச் செய்து சாதனையைப் புரிந்துள்ளார் ஜம்புநாதன் என்பது உளந்திறந்து பாராட்டுதலுக்குரியது. அவர் முதன் முயற்சியைத் தொடர்ந்து, வேறு எந்த வேத நெறி பரப்பும் நிறுவனமோ, தனிநபரோ வேத மொழிபெயர்ப்புக்குத் துணியவில்லை என்பதும் ஜம்புநாதனின் அரிய பணிக்குச் சான்றாகும்'' என்று குறிப்பிடும் அறிஞர் பெ.சு.மணியின் பாராட்டுரை முற்றிலும் மெய். வெறும் புகழ்ச்சி இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.

உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.




தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958ல் அமெரிக்காவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970 ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 12.

1972 ம் ஆண்டு 'பென்' எனும் பெயரில் தனது தனி ஆல்பத்த வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார். பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979 ல் ஆஃப் தி வால் மற்றும் 1982 ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது. த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது. த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.



1992 ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார்.
ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.


1994 ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது.
லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996 ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999 ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். ஜாக்ஸன் மகன்களின் பெயர் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2. 2005 ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13 ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.


மைக்கேல் ஜாக்சன் அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். லண்டன் நகரில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த இருந்த மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சிக்கு நடுவே மைக்கேல் ஜாக்சன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருடைய சுவாசம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உயிரை காப்பதற்காக போராடினர். பின்னர் யு.சி.எல்.ஏ. மருத்துவ மையத்திற்கு மைக்கேல் ஜாக்சன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உயிரை மீட்க மருத்துவர்கள் போராடினர். பின்னர் மைக்கேல் ஜாக்சன் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க நேரப்படி மாலை 2.26 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. (இந்திய நேரப்படி 26.06.09 அதிகாலை 2.56 மணி)


மைக்கேல் ஜாக்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் மரணத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மைக்கேல் ஜாக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த இடத்தில் திரண்டனர். பதட்டத்தோடு காத்திருந்த அவர்கள், ஜாக்சன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதும் கேவி அழுதனர்.ஜாக்சன் மரணமடைந்த செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் கூடினர். ரசிகர்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டபடி இருந்தனர். மைக்கேல் ஜாக்சன் மரணத்தை அடுத்து எம்டிவி தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல்களை ஒளிபரப்பியது. வானொலி நிலையங்களும் மைக்கேல் ஜாக்சனின் சாகாவரம் பெற்ற பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. மைக்கேல் ஜாக்சனின் மரணம் இசையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய முதல் ஆல்பத்தை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்த குவின்சி ஜோன்ஸ், இத்தனை இளம் வயதில் மைக்கேல் ஜாக்சன் உலகை விட்டு பிரிந்தது வேதனையை தருவதாகவும், அதனை விளக்க வார்த்தைகளே இல்லையென்றும் கூறியுள்ளார்.


மைக்கேல் ஜாக்சன் இசையுலகில் செலுத்திய தாக்கமும், பாதிப்பும் என்றென்றும் உணரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மைக்கேல் ஜாக்சனுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மேலும் ஜாக்சனுக்கு ஜெர்மினி, டிட்டோ, ராண்டி ஆகிய மூன்று சகோதரர்களும், ஜேனே மற்றும் லாடோயோ ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.



பாப் இசையுலகம் கொண்டாடிய மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணத்தை அடுத்து அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Sunday, June 21, 2009

மறக்க முடியுமா?



மறக்க முடியுமா? என்ன பாவம் செய்தோம்? - அருட் தந்தை ஜெகத் கஸ்பார்

jekath1
மறக்க முடியுமா? அழகான இருசொற் கேள்வி. நக்கீரன் தந்த இத்தலைப்பிற்கு ஆழமான பண்பாட்டுக் குணாதிசயங்கள் உண்டு. பைபிளில் கடவுள் சொல்வதாய் வரும் சொற்களில் மிக அதிகமாய் மீண்டும் மீண்டும் பதிவு பெறும் சொற்கள் இரண்டு. “”மறவாதீர்கள்”, “”நினைவில் கொள்ளுங்கள்” என்ற இரு சொற்கள். ஆங்கில மொழியில் மிகவும் பிடித்த, சொலவடைகளில் ஒன்று:

The burden and bliss of memory தமிழில் நினைவுகளின் சுமையும், சுகமும் என சுமாராக மொழிபெயர்க்கலாம்.

இன்று பாலஸ்தீன மக்கள் மீது சொல்லொணா அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் யூதர்கள் ஒரு காலத்தில், பல்வேறு அடிமைத்தனங்களை அனுபவித்தவர்கள். சற்றேறக்குறைய 5000 ஆண்டு காலம் பூமியின் பல்வேறு பரப்புகளில் அடிமைகளாயும் நாடோடிகளாயும் அவலமுற்று வாழ்ந்தவர்கள். வரலாறு முழுதும் வலிகளையே சுமந்து நடந்த யூதர்களால் எப்படி இன்று பாலஸ்தீன இசுலாமிய மக்கள் மீது இத்துணை கொடூரம் காட்ட முடிகிறதென்பது மானுட இயல்பின் புரிய இயலாத புதிர்களில் ஒன்று. ஆனால் 5000 ஆண்டு கால அடிமைத்தனத்தை அவர்களால் தாக்குப்பிடித்து, தப்பிப் பிழைத்திருந்து 1948-ல் இஸ்ரேல் என்ற நாட்டையும் பெற உதவியது அவர்களது “”மறவோம்” என்ற உறுதியும் “”நினைவில் கொண்டிருப்போம்” என்ற வைராக்கியமும்.

பட்ட துன்பங்களை அவர்கள் மறக்க வில்லை. அனுபவித்த அவலங்கள் அனைத்தை யும் பாடங்களில், பிரார்த்தனைகளில், உரை யாடல்களில், சமூக நிகழ்வுகளில், கதைகளில், காப்பியங்களில் என தமக்கும் தலைமுறை களுக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள்.

நமக்கு பொங்கல், கிறிஸ்து பிறப்பு, ரம்ஜான் போல் யூதர்களுக்கும் ஆண்டு தோறும் ஒரு திருவிழா உண்டு. அந்நாளில் எல்லா யூத வீடுகளிலும் பெரு விருந்து நடக்கும். அவ்விருந்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால் வேப்பங்காயை விட ஆயிரம் மடங்கு கசக்கும் ரசம் ஒன்றை குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரும் குடித்தாக வேண்டும். அக்கசந்த காடியை குடித்தபின் குடும்பத்தலைவர் யூத இனத்தின் துன்ப வரலாற்றை நெடுங்கதையாக வருணிப்பார். நெஞ்சம் கனத்தவர்களாய் தம் இனம் கடந்து வந்த பாதையின் பாடுகளை உள் வாங்குவார்கள். எக்காலத்திலும் எம் இனம் மீண்டும் அத்தகு துன்பங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை வராதபடி நாம் இடைவிடா விழிப்புணர்வோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்ற உறுதியையும் ஏற்பார்கள்.

1948-ல் தமக்கென இஸ்ரேல் நாடு கிடைக்கும் வரை சமூக நிகழ்வுகளிலெல்லாம் தமது இனத்தின் அவலங்களை புனிதத்தன்மை சார்த்தி நினைவு கூர்ந்தார்கள். உதாரணமாக அமெரிக்காவில் வாழ்ந்த கோடீசுவர யூதர் வீட்டுத் திருமண வைபவமானாலும் ஒரு சடங்கு உண்டு. மணமகன் தன் பாதத்தால் கண்ணாடிக் குமிழ் ஒன்றை மிதித்து உடைக்க வேண்டும். மங்கலமான மணவிழாவில் மணமகனின் காலிலிருந்து ரத்தம் பீறிடும். அப்போது யூத மத குரு அவன் காலில் கட்டுப் போட்டுக் கொண்டே சொல்வார்: “”மகனே, மணமகனே! இன்று உனக்கும் நமக்கும் மகிழ்ச்சியான நாள் என்பது உண்மைதான். ஆனாலும் உன் காலில் இப்போது நீ உணரும் வலிபோல நமது யூத இனம் நாடற்று அடிமைத் தனங்களை அனுபவித்து வருகிறதென்பதை நினைவில் கொள்வாயாக!”.

1980-களில் உலகைக் கலக்கிய இசைக்குழு போனி எம்- இர்ய்ங்ஹ்ம் அவர்களது பாடல்களில் மிகவும் புகழ் பெற்றது “”பாபிலோன் நதிக்கரை களிலே… இஹ் ற்ட்ங் தண்ஸ்ங்ழ்ள் ர்ச் இஹக்ஷஹ்ப்ர்ய் என்ற பாடல். உண்மையில் அப்பாடலின் வரலாறு யூதர்களுக் குரியது. பாபிலோனியப் பேரரசர் நெபுகத்நெசார் யூதர்களை வெற்றிகொண்டு அடிமைகளாய் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அடிமை வேலைக்கிடையே கிடைக்கும் ஓய்வின்போது தமது கடவுளைப் பற்றி பாடல் பாடும்படி சக பாபிலோனியர்கள் கேட்கிறார்கள். அப்போது அவர்கள் மனதின் உணர்வுகளாய் பதிவு பெற்ற வரிகள்தான் அப்பாடல். “”பாபிலோன் நதியின் கரையினில் நாங்கள் அமர்ந்து எங்கள் தந்தையர் தேசத்தை நினைத்தபோது அழுதோம். எம்மை அடிமைப்படுத்தியவர்களோ எங்கள் கடவுளைப் பற்றிப் பாடச் சொன்னார்கள். அடிமைப்படுத்தி யவர்களின் மண்ணில் நின்று கொண்டு எங்கள் கடவுளின் பெயரை எப்படி நாங்கள் உச்சரிப்போம்?” என்பதாக வளரும் மறக்க முடியாத அந்தப் பாடல்.

வேரித்தாஸ் வானொலி நாட்களில் எமக்கு கடிதமெழுதும் பெண்களில் இருவர் சிவசங்கரி மற்றும் அங்கயற்கண்ணி. அங்கயற்கண்ணி முதற்கடிதம் எழுதியது 1996 செப்டம்பர் 16-ம் தேதி. முதற்கடிதத்தின் சில வரிகள் இவை: “”சொந்த மண்ணில் அகதியாய் வயதான பெற்றோருடனும், கணவர் பிள்ளைகளு டனும், உறவினருடனும் பரந்தனிலிருந்து பத்து மைல் தூரத்தில் ஸ்கந்த புரத்தில் குடிசை கட்டி தஞ்சம் புகுந்திருக்கிறோம். மர நிழலிலும் குளக்கரைகளிலும் பசியும் பட்டினியுமாய் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்ற எம் மக்களின் பரிதாப நிலை நெஞ்சை உலுக்கு கிறது. ஒரு சமூகத்தை வேரோடு பிடுங்கிவிட்ட வரலாறு இங்கே நடந்து முடிகிறது. எங்களின் எதிர்காலம் என்ன? இன்றைய சந்தோஷங்களோ நாளைய நம்பிக்கைகளோ இல்லாத எங்கள் வாழ்க்கை எப்படி முடியப் போகிறது? எங்கள் துயரங்கள் யாராலுமே புரிந்து கொள்ளப்படப் போவதில்லையா? நாங்கள் ஏன் நேசிக்கப் படத்தகாதவர்கள் ஆனோம்?” என்ற கேள்விகளோடு அக்கடிதம் வந்தது. 2002 வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் நானும் வேரித்தாஸ் வானொலியை விட்டு அகல, தொடர்பறுந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் அங்கயற்கண்ணியிடமிருந்து மீண்டும் ஒரு மடல். முல்லைத்தீவு முற்றுகை நிகழுமுன்னரே தப்பி வந்து எழுதியிருக்கிறார். யார் மூலமாகவோ அக்கடிதம் கொழும்புக்கு வந்து, அங்கிருந்து பிரான்சு நாட்டுக் குப் போய், பிரான்சிலிருந்து நான் முன்பு தங்கியிருந்த தோமையார்மலை முகவரிக்கு வந்து, கடந்த புதனன்று தமிழ்மையம் வந்து சேர்ந்தது. ஏப்ரல் 19-ம் தேதியிட்டு எழுதப்பட்ட கடிதம்:

“எமக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இத்தனை துன்பங்களும் வதைகளும் பட எம் இனம் என்ன பாவம் செய்தது? உங்களுக்கு நான் கடிதம் எழுதிய அந்நாட் களை விட நூறு மடங்கு துன்பங்களை அனுபவித்து எல்லாமே இழந்து போன நிலை வர என்ன பிழை செய்தோம்? தமிழராய் பிறந்தது அவ்வளவு பெரிய குற்றமா?

மரணத்தின் விளிம்பில் வந்து நிற்கிறோம். வன்னி மக்கள் இயல்பில் எளிமையானவர்கள். சக மனிதர்களை நேசிப்பவர்கள். சூது, வாது தெரியாதவர்கள். ஏழ்மை யிலும் விருந்தினரை உபசரிக் கும் இனிய பண்புடையவர் கள். அம்மக்கள் ஒருவேளை கஞ்சிக்கு பாத்திரமேந்தி மணிக்கணக்கில் காத்திருப்பது காணப் பொறுக்க வில்லை. எதிரி நடுவில் ஆடு மாடுகள் போல் அடைபட்டுக் கிடக்கிறோம்.

ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து நாங்கள் காப்பாற்றப்பட மாட்டோமா எனத் தவிக்கிறோம். கவலைப்படாதீர்கள் என்று எம் கண்ணீர் துடைக்க ஒரு கரமாவது நீளாதா என அங்குமிங்கும் பார்க்கிறோம். யாரோடு நோவோம், யாருக் கெடுத்துரைப்போம்? துயரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட எமக்கு எவரும் இல்லை. எனவேதான் எப்படியாவது தங்கள் கரம் எட்டும் என்ற நம்பிக்கையில் இக்கடிதம் எழுதுகிறேன். என் மன ஆறுதலுக்காக”.

-அங்கயற்கண்ணி எழுதியிருந்த நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி இது.

கடந்த வியாழன்கூட சவேரா விருந்தினர் விடுதியின் மேல்தள உணவகத்தில் மனச்சுமை குறைக்க நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, ராய் என்ற வங்காளத்து நண்பர் கேட்டார்: “”எல்லாம்தான் முடிந்துவிட்டதே… ஏன் தேவையில்லாமல் பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்? திருவாசகம், சென்னை சங்கமம் போல் செய்வதற்கு எவ்வளவோ நல்ல காரியங்கள் இருக்கின்றனவே…” என்றார். நான் அவருக்குச் சொன்னேன்:

“”மே 18-ம் தேதி மட்டுமே 20,000 தமிழ் மக்கள் முல்லைத்தீவில் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். பதுங்கு குழிகளுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு குற்றுயிராய் துடித்துக் கிடக்கையிலே புதைக்கப்படுகையில் இயலாமையின் அந்தரிப்பொன்று அம்மக்களை ஆட் கொண்டிருக்குமே… அதற்கு அந்தக் கடவுள் மட்டுமே சாட்சியாய் நின்றிருக்க முடியும். அவர் சாட்சியாய் நின்றிருந்த காரணத்தினால் மட்டுமே நான் பேசுகிறேன். நான் பேசும் மொழியை பேசியவர்கள் என்பதால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள். ஏன் கொன்றீர்கள் என்றுகூட நான் இப்போது கேட்கவில்லை. மிகக் குறைந்தபட்சம் என் சடலத்தையேனும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன்” என்றேன்.

- நக்கீரன்


பிரபாகரனே பிரமாண்டமாய்…!


eelasinnam_ltte_ovijarபுலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா “தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்’ என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார்.

“”இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத்துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்” என்று முனகியபடியே இருக்கிறார்.

“”இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்” என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணற்றுக்கு விரைந்தோம். அங்கே அவரைப் பார்க்க வந்திருந்தார் யாழ்ப்பாண நண்பரொருவர். அவர் நம்மிடம், “”இப்போது பிரபாகரன் மட்டும் இவர் முன்னால் வரட்டும். நடராசாவுக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்ல, புன்முறுவலோடு மெதுவாகத் தலையசைத்தார் பெரியவர்.

உடனே அந்த நண்பர் “”இலங்கைல கொடூரமா நடக்குற தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்தணும். அதுக்காக இங்கே தமிழகத்துல நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி வழக்கமாச் சாப்பிடுற மருந்து, மாத்திரையை வேண்டாங்குறாரு. எந்திரிச்சு உட்காரக்கூட முடியாத நெலமைல போராடப் போறேன்னு சொல்றாரு” என்று வருத்தப்பட்டார்.

“அய்யா…’ என்று பெரியவரின் அருகில் சென்றோம். அவரோ உணர்ச்சிக் கொந்தளிப்பில், “”தேசப் பற்றோடு தமிழ்நாட்டுல கலெக்டரைச் சுட்டுக் கொன்ன வாஞ்சி நாதன் வரலாற்றுல இடம் பிடிச்சிருக்கான். விடுதலைக்காக புரட்சி செய்த பகத்சிங் புகழை நாம் பாடறோம். பிரபாகரனும் சாதாரண மனுஷன் இல்ல. ஒரு இனத்தோட விடுதலைக்காக போராடிக்கிட்டிருக்கான்” என்று அடிக்குரலில் பேசினார்.

பிறகு கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டார். “”பிரபாகரனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நாஞ் சொன்னேன். என்னோட புல்லட்டத் தர்றேன், நீங்க பைக் ஓட்டக் கத்துக்கணும்னு. அதுக்கு தம்பி சொன்னாரு, “எங்கட நாட்டுல பெட்ரோல் கிடைக்காது. சிங்கள ராணுவத்தோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு சத்தமில்லாம பயணிக் குறதுக்கு சைக்கிள்தான் சரியா இருக்கும்.

எங்கட மக்களுக்குப் பயன்படாத ஒரு விஷயத்த நான் கத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது அண்ணா… சிங்களத்தான் மிகக் கொடியவன். அவனை எதிர்த்து நிக்கணும்னா துப்பாக்கி சுடத்தான் தெரியணும். அதனால, துப்பாக்கிப் பயிற்சிதான் எங்கட இயக்கத்தோட தேவையே. அதைத்தான் மத்திய, மாநில அரசோட ஒத்துழைப்புல இங்கே பண்ணிக்கிட்டிருக்கோம்’னாரு.

போராடணும் போராடணும்னு துப்பாக்கி மீது தம்பிக்கு கிறுக்கே பிடிச்சிருச்சு. துருப்பிடிச்சு ஒண்ணுக்குமே உதவாத துப்பாக்கியா இருந்தாக்கூட, அத வாங்கி மண்ணெண்ணெய் ஊத்திக் கழுவித் துடைச்சு, அக்கக்காப் பிரிச்சு அதன் செயல்பாட்டத் தெரிஞ்சுக்குவாரு. இந்த ஆர்வத்துலதான் எந்தத் துப்பாக்கியா இருந்தாலும் அதைச் சிறப்பா கையாளுற நுட்பம் அவருக்கு அத்துபடியாச்சு.

நேதாஜியத்தான் மானசீக ஆசான்ம்பாரு. நேதாஜியப் படிச்சுப் படிச்சுத்தான் விடுதலை வேட்கைல தனக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சுன்னு சொல்வாரு. இந்திய தேசியப் படையின் பிரிவுகளுக்கு நேதாஜி வச்சிருந்த பெயர்களையும், அவரு படை திரட்டுன விதத்தையும் அத்தனை விரிவாப் பேசுவாரு. எதையும் தீர்க்கமா சிந்திச்சு, திட்டம் தீட்டி ஒரு காரியத்தை முடிக்குற வரைக்கும் அதே சிந்தனையாத்தான் இருப்பாரு.

என் வீட்டுல தங்குறப்ப எப்பவுமே ஜன்னல் பக்கமா படுக்க மாட்டாரு. ரொம்பவும் முன்னெச்சரிக்கையா இருப்பாரு. சில நேரங்கள்ல ஒரு வாரம் கூட தங்குவாரு. ஆனா, வீட்டுல இருக்குறவங்களுக்கே தம்பி மாடில இருக்குறது தெரியாது. அந்த அளவுக்கு அவரோட நடவடிக்கைகள் சைலண்ட்டா இருக்கும். புலி பதுங்கிப் பாயுங்குறது தம்பி விஷயத்துல ரொம்பவும் பொருந்தும்.

இப்பவும் பதுங்கித்தான் இருக்காரு. அது உயிர் வாழணும்குற ஆசையில இல்ல. தமிழினம் நாதியத்துப் போயிடக் கூடாதுங்குற வெறில… சமைக்குறதுக்காக அறுக்குற கோழியக் கூட ஒரேயடியா அறுத்துடணும். முனை மழுங்கிய கத்தியால ரொம்ப நேரம் அறுத்து அதைச் சித்திரவதை பண்ணக் கூடாதும்பாரு. இப்படித்தான் ஒரு தடவை என் மனைவியோட பிறந்த நாளன்னைக்கு கோழிய அறுக்கப் போன அவகிட்டயிருந்து கத்தியை வாங்கி “உங்களோட பிறந்த நாளான இன்னைக்கு உங்க கையால ஒரு உயிரு சாகணுமா? நான் அறுத்துத் தர்றேன்’னு அவரே அறுத்தாரு.

எதிரிக்கு சிம்ம சொப்பனமா இருக்குற அவருக்குள்ள இப்படி ஒரு சாந்தமான குணமும் இருக்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கும். ஒருநாள் ஏதோ ஒரு கவலைல நான் இருந்தப்ப, “அண்ணா… குவிச்சு வச்சிருக்குற என் கை விரலப் பாருங்க. இடைவெளி இல்லைல்ல. இப்படியிருந்தா நல்லதுன்னு சொல்வாங்கள்ல…’ என்று உற்சாகமாகச் சொல்ல… நானோ, “இத்தனை குழந்தைத் தனம் உள்ள ஒரு மனிதனை சிங்களனுங்க போராளி ஆக்கிட்டானுக’ என தம்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டேன்.

தம்பியோ “அடப் போங்கண்ணா… என் அப்பா, என் அம்மா, என் சொந்தக்காரங்கன்னு எல்லாரு மாதிரியும் எனக்கும் சாதாரண வாழ்க்கை அமையணும்னா நெனக்குறீங்க. என் நாடு, என் தமிழினம்னு ஒருநாள் வாழ்ந்தாக் கூட போதும்ணா. அப்படித்தாண்ணா… சுயநலமே இல்லாத ஒரு பெரும்படையே நம்ம இயக்கத்துல சேர்ந்து இனத்துக்காக ரத்தம் சிந்தி உயிரை விட்டுக்கிட்டிருக்கு’ன்னு தான் வாழ்வதற்கான அர்த்தத்தையே எனக்கு விளக்கிட்டாரு.

கண்ணகியின் கற்பு கூட இங்கே பேசப்படுது. பிரபாகரன் சுத்தமான தமிழ் வீரன். தமிழ் இனத்தோட அடையாளம்” என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட, இயல்புக்கு மாறாக அவர் உடல் நடுங்கியது. உடல் நலிவையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் உரையாடிய பெரியவரிடம், “”சற்று ஓய்வு எடுத்துக்கங்க…” என்றார் அந்நண்பர். அவரைக் கைத்தாங்கலா படுக்க வைத்துவிட்டு, கரம் கூப்பி நாம் விடைபெற்ற போது நம் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார்.

“”நக்கீரன்ங்குற பேருக்கு ஏத்த மாதிரியே தமிழ் உணர்வோட நெறய கட்டுரைகள் எழுதுறீங்க. தம்பி பிரபாகரனைப் பத்தி பலருக்கும் பல விஷயம் தெரியும். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதயும் உலகத்துக்குச் சொல்ல வச்சிட்டீங்க. ரொம்பவும் மனநிறைவா இருக்கு” என்று கண்கலங்கினார். மறுநாளும் பெரியவரின் வீட்டிலிருந்து தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொள்ள… “அய்யா அழைக்கிறாரா?’ என்றோம்.

எதிர்முனையில் பதிலெதுவும் கூறாமல் அமைதி காத்தார்கள். அதுவே வலியாக நமக்குள் ஊடுருவ… “”அய்யா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருய்யா…” என்று பெருங்குரலெடுத்து அழுதார்கள். தனக்குள் பிரம்மாண்டமாக 32 ஆண்டுகளாக உறைந் திருந்த பிரபாகரனை கடந்த இரண்டு இதழ்களின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இறக்கி வைத்த அவர் அசையாத ஓவியமாக கண்ணாடிப் பேழைக்குள் காட்சியளிக்க… வாசகர்களின் சார்பில் அம்மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினார் ஆசிரியர்.

- நக்கரன்


நாடு கடந்த அரசாங்கம்” என்றால் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்! இலங்கை அரசுக்கு புதிய தலையிடி

tamileelam1நாடு கடந்த அரசாங்கம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டுவிட்டதாக இலங்கையரசு அறிவித்துள்ள நிலையிலேயே தற்போது இந்த “நாடு கடந்த அரசாங்கம்” என்ற சொல் அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது.

“நாடு கடந்த அரசாங்கம்” என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. “நாடு கடந்த அரசாங்கம்” என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும், அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக “நாடு கடந்த அரசு’ என்றால் என்னவென்பதை பார்ப்போம்.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரஷ்யன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர் சொந்த நாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசொன்றை நிறுவுவதாகும். காலப்போக்கில் இந்த அரசாங்கமானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவதே இந்த நாடு கடந்த அரசாங்கமாகும்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தை பிரயோகிப்பது, சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவது, இன அழிப்பு செவது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை,சிறுவர்களை கடத்துவது போன்ற கொடூரங்களும் குறிப்பிட்ட இனத்தின் அரசியல் தலைவர்களை புறந்தள்ளல் போன்ற நிகழ்வுகளும் நாடு கடந்த அரசொன்றை நிறுவ சர்வதேச சட்ட மரபு நெறிகளில் இடம் வழங்குகின்றன.

இரண்டாம் உலகப் போரில் பல ஐரோப்பிய நாடுகளை ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிப்படைகள் கைப்பற்றியதனால் பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இவ்வாறான நாடு கடந்த அரசாங் கத்தை நடத்தி வந்தனர். இதனால் அவர்களின் தேசியம் பாதுகாக்கப்பட்டது.

1920ஆம் ஆண்டில் பெலாரஷ்யன் என்ற அமைப்பு தனது நாடு பெலாரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை நாடுகடந்த அரசாங்கமாகவே இயங்கிவருகின்றது. இதேபோன்று திபெத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செதபோது அந்நாட்டின் ஆன்மிகத் தலைவர் தலாலாமா இந்தியா சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகின்றார்.

உலகில் இன்றுவரை 11இற்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங் கங்கள் செயற்பட்டு வருகின்றன.

அப்காஷியா சுயாட்சிக் குடியரசு (1993), பெலாரஷ்யன் தேசிய குடியரசு (1920), கபின்டா குடியரசு (1975), செச்சென் குடியரசு (2000), எதியோப்பியா அரச சபை (1993), ஈரான் ஏகாதிபத்திய அரசு (1979), லாவோ ஏகாதிபத்திய அரசு (1975), சகாராவி அரபு ஜனநாயகக் குடியரசு (1976), சேர்பியன் கரஜினா குடியரசு (2005), மலுகு செலாற்றன் குடியரசு (1950), மத்திய திபெத்திய நிர்வாகம் (1959) போன்றவை நாடுகடந்த அரசாங்கங்களாக செயற்படுகின்றன.

இந்த நாடு கடந்த அரசாங்கங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளாக அப்காஷியா, பெலரெஸ், அங்கோலா, ரஷ்யா, எதியோப்பியா, ஈரான், லாவோ, மொறாக்கோ, குரோஷியா, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளாக, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது, தேசியத்தின் சட்டமுறைகளை பாதுகாப்பது, ஒரு தேசிய இராணுவத்தை பாதுகாப்பது அல்லது கட்டி எழுப்புவது, இராஜதந்திர ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்தல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை உருவாக்குதல், தேர்தல் நடத்துதல் போன்றவை உள்ளன.

நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைக்க ஏதாவது ஒரு வெளிநாட்டின் அங்கீகாரம், அல்லது அனுமதி தேவை. அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு பாதிப்போ இடையூறுகளோ ஏற்படாதவிடத்து நாடு கடந்த அரசாங்கமொன்றை அந்த நாட்டில் நிறுவ முடியும்.

இவ்வாறு வெளிநாடுகளில் அமைக்கப்படும் நாடு கடந்த அரசாங்கமொன்றினால் தமது அரசின் தூதுவர்களை நியமிக்க முடியும். வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒரு நாட்டு அரசாங்கம் என்ற தகுதியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமுடியும். ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்கள், நடைமுறைகளும் இந்த நாடு கடந்த அரசாங்கங்களுக்கும் உண்டு.

பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமது சமுதாயத்தினை அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு ரீதியில் பலப்படுத்தவும் தமது சொந்தமண்ணில் அரசுரிமையை பெறுவதற்கும் சர்வதேச சவால்களை அதே ரீதியில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இதேவேளை ஒரு நாடு கடந்த அரசாங்கமானது சிறப்பாக செயற்பட ஒரு நாட்டின் அனுமதி அல்லது அங்கீகாரம் தேவை. அனுமதி அல்லது அங்கீகாரம் தரும் நாடு சில வேளைகளில் அவற்றை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அதிகாரம் இழக்கப்படக் கூடும்.

இவ்வாறானதொரு அரசாங்கத்தையே அமைக்கப் போவதாக தற்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரெனக் கூறப்படும் கே.பத்மநாதன் அறிவித்துள்ளதுடன் நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்றையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தினதும் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும் 2003 ஆம் ஆண்டில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப் பகிர்வின் தளமாக அமைந்துள்ளதுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழரின் தாயக நிலம், ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை, ஈழத்தமிழரின் அரசியல் அபிலாஷைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ்மக்களையும் ஓரணியில் ஒன்றிணைப்பதே இந்த “நாடு கடந்த அரசாங்கம்’ என்ற அறிவிப்பின் நோக்கமாகவுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கமோ ” இது ஒரு கற்பனை’யென்றும் இதனை கற்பனையில் வைத்தே தாம் அழித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளது. அத்துடன் சகலநாடுகளிலுமுள்ள தமது வெளிநாட்டுத் தூதுவர்களை இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதுடன் இத்திட்டத்தை முறியடிக்க சகலவித இராஜதந்திர நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.