Monday, August 10, 2009

வைன் ப்ளூ

-ஏ.கே.கான் Swine influenza virus

திடீரெனத் தோன்றி படுவேகத்தில் பரவி பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளது ஸ்வைன் ப்ளூயென்ஸா எனப்படும் ஸ்வைன் ப்ளூ. இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப்படுகிறது. (பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் என பல பெயர்கள் உண்டு)

ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக (ஜீன்) கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இன்ப்ளூயென்சா (Influenza).

இப்போது ஸ்வைன் ப்ளூவைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸ் (swine influenza virus-SIV). பன்றிகளுக்குள் நுழைந்துவிட்டால் அதன் சுவாசப் பாதையில் வலம் வரும் இந்த வைரஸ் முதலில் பன்றிகளைக் கொல்லும். இந்த வைரசில் பல வகைகள் (strains) உண்டு.

மேலும் ஆர்என்ஏவை அடிப்படையாகக் கொண்ட இந்த நுண்ணுயிர்களுக்கு உருமாறும் (mutate) திறன் உண்டு. பொதுவாக பன்றிகளில் வாழும் ஒரு வைரஸ் மனிதனுக்குள் புகுந்தால் அதை மனிதனின் தற்காப்பு சிஸ்டம் (Immune system) அழித்துவிடும். ஆனால், இந்த மியூட்டேசன் எனப்படும் உருமாறும் திறன் மூலம் மனிதனின் தற்காப்பு சிஸ்டத்தை வென்று விடுகிறது இந்த வைரஸ்.

இதனால் தான் பன்றிகளில் இருந்து மனிதனுக்குள் புகுந்து தாண்டவமாட ஆரம்பித்துள்ளது இந்த வைரஸ். இம்முறை மெக்சிகோவின் பன்றிகள் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து தான் இந்த வைரஸ் மனிதனுக்குள் ஊடுருவியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மெக்சிகோவில் பன்றிகளுக்கு இது எப்படி பரவியது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனாலும், ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் இந்த வைரஸ் வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு மெக்சிகோவில் பன்றிகளில் புகுந்து உருமாறி மனிதனுக்குப் பரவியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்த வைரசின் ஆர்என்ஏவை சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பொருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோ-வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

மனிதனுக்குள் நுழைந்துவிட்டால் அவர்களது உடலில் பல்கிப் பெருகி சுவாசம் மூலம் அடுத்தவருக்குப் பரவும் திறன் கொண்டது இந்த வைரஸ். இப்போது பரவிக் கொண்டிருக்கும் வைரசுக்கு H1N1 என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறு மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் இந்த பன்றி்க் காய்ச்சல் , பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்கிறார்கள். காரணம், 75 டிகிரி அளவுக்கு மாமிசம் சூடாகும்போதே இந்த வைரஸ் அழி்ந்துவிடும்.

இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த amantadine, rimantadine, Tamiflu (oseltamivir) and Relenza (zanamivir) உள்பட சில மருந்துகள் உள்ளன. ஆனால், முன் கூட்டியே தடுக்கும் வாக்சீன்கள் இல்லை. இந்த மருத்துகளையும்
மருத்துவர் [^] ஆலோசனைப்படியே பயனபடுத்த வேண்டும்.

(இதில்
அமெரிக்கா [^] மற்றும் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிசேசை அளித்தபோது இந்த வைரஸ் amantadine and rimantadine ஆகியவற்றுக்குக் கட்டுப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது)

அதே நேரத்தில் கொஞ்சம் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது, நோய் தாக்கப்பட்டவர்கள் இருந்தால் அங்கு நடமாடும்போது மூக்கையும் வாயையும் மூடும் பில்டர்களை அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நோய்
தாக்குதல் [^] உள்ள பகுதிகளுக்குப் போய்விட்டு வந்தால் வாய், கண், மூக்கில் கைகளை வைப்பதை தவிர்ப்பது, வீட்டில் குப்பை சேராமல் தவிர்ப்பது போன்றவை அதில் சில.

நோய் தாக்கப்பட்டவர் இருமல் வந்தால் துணியை வைத்து வாயை மூடிக் கொண்டு இருமினால் அடுத்தவருக்குப் பரவாது.

இந் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பூசி (வாக்சீன்) கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஆனால், அதற்குள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய சிக்கலை உலகம் எதி்ர்கொள்ளப் போவது நிச்சயம்.

யூக வியாபாரம் செய்து உலகப் பொருளாதாரதைதையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிட்ட பங்குச் சந்தை புண்ணியவான்களுக்கு இப்போது இந்த வைரஸ் கிடைத்துவிட்டது. இது போதாதா.. உலகின் பல நாடுகளிலும் சந்தைகளில் நேற்று பெரும் சரிவு. காரணம் கேட்டால், ஸ்வைன் வைரஸ் என்கிறார்கள்...

அடப் பாவிகளா!

(கட்டுரையாளர்
தட்ஸ்தமிழ் [^] ஆசிரியர்)