Friday, June 12, 2009

இலங்கை அரச பயங்கரவாதிகளின் கையிலா எம் மக்கள் சாக வேண்டும்?

இலங்கை அரச பயங்கரவாதிகளின் கையிலா எம் மக்கள் சாக வேண்டும்? இதை மாற்ற புலம்பெயர் தமிழர்களால் முடியாதா??

aftermath_idp8வன்னியில் அண்மைக் காலத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்தே வருகின்றது.

இதனால் இந்த முகாம்களில் உள்ள சுமார் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பில், எதுவுமே தெரியாத ஒரு நிலையே நீடிப்பதாக வன்னியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Cambidpnerudal1

இரகசியத் தன்மை பேணப்பட வேண்டும் என்ற பெயரில் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாரிய உணவின்மை மற்றும் அடிப்படை வசதியின்மை காரணமாக பெரும் நோய்த் தொற்றல்களையும் கடுமையான பின்னடைவுகளையும் சந்தித்திருப்பதாக அங்குள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் கூறுகின்றன.

இந்த முகாம்களில் உள்வர்களுக்கான உதவிகளை வழங்க பல்வேறு தரப்புகளும் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் பாதுகாப்பு அமைச்சு அதற்கான அனுமதியை தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது.

இதனிடையே அனுமதி வழங்கப்பட்ட ஏனைய முகாம்களில் கூட இலங்கை அரசின் உத்தியோக பூர்வ அமைப்பான மனித உரிமைகள் அமைப்பு தாங்கள் எதனையுமே செய்ய முடியாத ஓர் இக்கட்டான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

Cambidpnerudal

ஒப்புக்கு குறித்த முகாம்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்லும் தாங்கள் மலசல கூட வசதி குடிநீர் வசதி போன்ற வெளிப்படைக்குத் தேவையான பிரச்சினைகள் குறித்து மட்டுமே கதைக்கக் கூடியதாக உள்ளதாகவும் அங்குள்ள மக்களின் நிலைகள் தொடர்பாகவோ அல்லது ஏனைய விடயங்கள் தொடர்பாகவோ தாங்கள் வாய் திறப்பதற்கு எந்தவொரு அனுமதியும் இல்லை எனவும் கொழும்புத் தலைமையகத்திற்கு தம்மால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள் தொடர்பில் எந்தவொரு ஆக்கபூர்வமான அறிவிப்போ பதிலோ கிட்டாத நிலையே காணப்படுவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அதிகாரிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே புதிதாக திறக்கப்பட்ட இந்த முகாம்கள் பலவற்றில் ஏனோதானோ என்ற வகையில் தான் உணவு விநியோகம், குடிநீர் விநியோகம் கூட இடம்பெறுவதால் அங்குள்ளவர்கள் மிக மோசமான நெருக்குவாரங்களை சந்தித்து வருவதாகவும் அடுத்து வரும் காலங்களில் இது மிகவும் மோசமான பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த முகாம்களில் விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையே தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Cambidpnerudal2

இந்த நிலையில் அங்கு கடமையாற்ற வந்த சிங்கள பெரும்பான்மையின அரச சார்பற்ற அமைப்பொன்றின் பிரமுகர் ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இந்த முகாம்களில் நிலவுகின்ற அவலங்கள் நாங்கள் இலங்கையர்கள் என்று பெருமைப்படுவதில் ஏதுமற்றதோர் நிலையே காணப்படுவதாக மிகவும் ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

எமது மக்களுக்கு நடந்த – நடக்கின்ற கொடுமையை தட்டிக் கேட்க்க அனைவரும் ஒன்றாக திரள்வோம், பிரித்தனியாவின் கடமையை அவர்களுக்கு இன்னும் உரக்க சொல்வோம்

Wednesday, June 10, 2009

அன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே!

அன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! – விடுதலைப்புலிகள் மட்டு, அம்பாறை அரசியற் துறை

LTTE.thayamohan2மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.

இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும், அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால், இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம், சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள், நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும், அடுத்து நாம் என்ன செய்யவேண்டும், அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது, எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல, சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும், ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும். உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால், அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும், விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால், நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும், எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…

தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு, அம்பாறை அரசியற் துறை


"அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்"

பிரபாகரனே வந்தாலும் இனி ஆயுதம் வேண்டாம் அகிம்சையே வேண்டும் : தமிழருவி
on 10-06-2009 20:46

Favoured : None

Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை

ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். "அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்" என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் 'தமிழா... உன் கதி இதுதானா?' எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :Image


"உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."

என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!

விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!

சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!

ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.

என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.

"பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!" என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?

சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!

சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். 'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.
பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.

'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!

வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!

'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.

ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.

முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Puthinam