1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி ஹவாய் தீவில் உள்ள ஹோனலூலு என்ற இடத்தில் பிறந்தார் ஒபாமா. அவரது முழுப் பெயர் பாரக் ஹுசேன் ஒபாமா. அவரது தந்தை பாரக் ஒபாமா சீனியர், கென்யாவின் நியான்சா மாகாணத்தில் லூ என்ற கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்.
கென்யாவில் ஒபாமாவின் பால பருவம் கழிந்தது. அவரது தந்தை அங்குள்ள ஆங்கிலேயர் ஒருவரிடம் வேலைக்காரராக இருந்து வந்தார். தந்தை ஆடுகளை மேய்க்கச் செல்லும்போது உடன் செல்வாராம் ஒபாமா. அப்பகுதியில் நிறைய முஸ்லீம்கள் இருந்தபடியால் தனது மகனின் பெயரில் ஹூசேன் என்ற பெயரையும் சேர்த்து வைத்திருந்தார் ஒபாமாவின் தந்தை.
ஒபாமாவின் தாயார் ஆன் துன்ஹாம். கான்சாஸ் மாநிலம், விசிடா நகரில் வளர்ந்தவர். இவருடைய தந்தை எண்ணை எடுக்கும் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். பல்வேறு நகரங்களில் இருந்து வந்த ஆன் துன்ஹாமின் குடும்பம் கடைசியாக ஹவாய்க்கு இடம் பெயர்ந்தது.
இந்த நேரத்தில்தான் படிப்புக்காக பாரக் ஒபாமா சீனியர் ஹவாய்க்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள கிழக்கு மேற்கு பல்கலைக்கழக மையத்தில் படித்தார். அங்கு அவருடன் படித்தவர்தான் ஆன்.
இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒபாமாவுக்கு 2 வயதாக இருந்தபோது தாயும், தந்தையும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர். பின்னர் பி.எச்.டி படிப்பதற்காக ஹார்வர்ட் சென்ற ஒபாமாவின் தந்தை அதன் பின்னர் கென்யாவுக்குத் திரும்பிச் சென்று விட்டார்.
அதன் பின்னர் இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சோடோரோ என்பவரை மணந்து கொண்டார். இதையடுத்து 1967ல் ஆன் தனது கணவர், குழந்தைகளுடன் ஜகார்த்தா சென்றார். அங்குதான் ஒபாமாவின் தங்கையான மயா சோட்டோரா பிறந்தார். அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படித்த ஒபாமா, இந்தோனேசிய மொழியில் பாடங்களைப் படித்தார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிந்னர் பத்து வயதாக இருந்தபோது தனது பாட்டி, தாத்தாவுடன் இருப்பதற்காக ஹவாய் திரும்பினார் ஒபாமா. பின்னர் ஆனும், ஹவாய் திரும்பி விட்டார்.
புகழ் பெற்ற புனஹோ அகாடமியில் படிக்கச் சேர்ந்தார் ஒபாமா. அப்போது அங்கு கருப்பர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 3 பேர் மட்டுமே இருந்தனர். இங்குதான் முதன் முதலாக இனவெறியின் கொடுமையை உணர்ந்தார் ஒபாமா. தான் ஒரு அமெரிக்கர் அல்ல, ஆப்பிரிக்க - அமெரிக்கர் என்ற உண்மை அவரை வருத்தியது.
தனது தந்தையும், தாயும் விவாகரத்து செய்து கொண்ட பின்னர் தந்தையை ஒரே ஒரு முறைதான் பார்த்துள்ளார் ஒபாமா.
இளம் வயதில் ஏற்பட்ட இதுபோன்ற துயரங்களை மறக்க போதைப் பொருட்களையும், மதுவையும் நாடுவாராம் ஒபாமா.
1983ல் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை முடித்தார் ஒபாமா. அதன் பின்னர் ஒரு சர்வதேச வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் பின்னர் சிகாகோவுக்கு இடம் பெயர்ந்தார். 1988ல் ஹார்வட் சட்டப் பள்ளியில் நுழைந்தார்.
1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹார்வர்ட் லா ரெவ்யூ என்ற இதழின் எடிட்டர் ஆனார். இந்தப் பதவிக்கு வந்த முதல் ஆப்பிரிக்க- அமெரிக்கர் ஒபாமாதான். 1991ல் தனது சட்டப் படிப்பை முடித்தார்.
பின்னர் மனித உரிமை வக்கீலாக தனது வாழ்க்கையை தொடர்ந்தார் ஒபாமா.
அவரது பேச்சுத் திறமையும், புத்திசாலித்தனமும், வேகமாக அவரை அரசியலுக்கு இட்டுச் சென்றன. ஜனநாயகக் கட்சியின் சார்பில் 1996ம் ஆண்டு அவர் இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000மாவது ஆண்டில், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2002ல் சிகாகோவில் நடந்த பெரும் கூட்டம் ஒன்றில் ஈராக்குக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பிய ஜார்ஜ் புஷ்ஷின் செயலை கடுமையாக விமர்சித்துப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில், 2004ல் நடந்த அமெரிக்க செனட் சபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஒபாமா. அந்த வெற்றி மிகப் பெரியது. காரணம், கிட்டத்தட்ட 70 சதவீத வாக்குகளுன் வெற்றி பெற்றார் ஒபாமா. அமெரிக்க வரலாற்றில் அது மிகப் பெரிய சாதனையாக பதிவானது.
2007ம் ஆண்டில் தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தபோது அனைவரது எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஹில்லாரி கிளிண்டனுக்கும், ஒபாமாவுக்கும் இடையே நிலவிய கடும் போட்டியை உலகமே வியப்புடன் பார்த்தது. இறுதியில் ஒபாமாவின் கை ஓங்கவே ஹில்லாரி போட்டியிலிரு்து விலகிக் கொண்டார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார் பாரக் ஒபாமா. புதிய வரலாறும் படைத்தார்.
கடுமையான பாதையில் நடைபோட்டு வந்த பாரக் ஒபாமா, கருப்பர் இனத்திற்கு பெரும் பெயரைச் சேர்க்கும் வகையி்ல் அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பதவியில் அமரும் முதல் கருப்பர் இனத்தவர் என்ற புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.
ஒபாமாவுக்கு மிஷல் என்ற மனைவியும், மலியா, சாஷா என்ற இரு மகள்களும் உள்ளனர்.