Friday, July 10, 2009

ஏன்? என்ன? எப்படி? எதற்கு? எவ்வாறு? என்று கேள்விக் கேட்கப் பிறந்தவன் மனிதன்.

மனிதனுடைய மனத்தை வசப்படுத்தும் கலைதான் பேச்சுக்கலை : தமிழச்சி

10-07-2009


மொழி!
Imageமொழி என்னும் பேராற்றல் : கற்கால மனிதர்கள் சிலர் ஒன்று கூடி சிறு கூட்டங்களாக வாழத் தொடங்கிய காலத்தில் மனிதர்கள் தங்கள் விருப்பம் போல் வைத்துக் கொண்ட ஒலிக்குறியீடுகளின் தொகுதியே அவர்கள் பேசுகின்ற மொழியாகிறது. பிறந்த குழந்தை தாய் தந்தையின் மொழியைக் கற்று பேசுவது தாய் மொழியாகிறது. மொழியின் உருவாக்கம் அபாரமானது. மொழி என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கை நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும்? யார் என்ன நினைக்கிறார்கள்? யார் என்ன சொல்கிறார்கள்? யார் என்ன எதிர்பார்க்கிறார்கள்? – என ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்போம், குழம்பிப்போயிருப்போம்.



மனிதர்களை இணைக்கும் மாபெரும் பேராற்றல்! ஆறாவது அறிவின் வெளிப்பாடு! ஐந்தறிவு உள்ள மிருகத்தையும் ஆறறிவு உள்ள மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுவது மொழி. ஏன்? என்ன? எப்படி? எதற்கு? எவ்வாறு? என்று கேள்விக் கேட்கப் பிறந்தவன் மனிதன். ஐந்தறிவு மிருகங்களுக்கு கேள்வி கேட்கும் ஞானம் இல்லை. அதனால் அவை கேள்வியும் கேட்பதில்லை, பதிலும் எதிர்பார்ப்பது இல்லை.

ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்கத் தெரிந்ததால்தான் மிருக நிலையிலிருந்து பகுத்தறியும் தன்மைக்கு உயர்ந்தான் மனிதன். பல்வேறு சிற்றொளிகளைக் கொண்டு மனிதன் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட கருவிதான் குரல்வளை என்றான் ஓர் விஞ்ஞானி. மனிதன் ஒலிகளை எழுப்பக்கற்று மொழியாக்கி, சொற்களை கோர்வைகளாக்கி, புகழ்ந்து, இகழ்ந்து, விமர்சித்து, அறிவுறுத்தி, எழுதக்கற்று, இலக்கியமாக்கி, இலக்கணமாக்கி, காவியம் படைத்து, அக்கருத்துக்கள் மற்ற மனிதர்களுக்கு சென்றடைய அச்சுக்கலையை கண்டதுவரை மனித முயற்சியை விளக்கிவிட முடியாதது.

மொழி!

உலகில் உருவான மொழிகளில் பழமை வாய்ந்த மொழியான தமிழ்மொழி அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியானவை என்கிறது வரலாற்று ஆய்வுகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பல காவியங்கள் காலத்தால் அழிக்கப்பட்டு, இரட்டடிப்பு செய்யப்பட்டு, இயற்கையின் சீற்றத்தால் அழிந்து சிதைந்து மிஞ்சி நிற்கும் திருக்குறள், புறநானூறு, அகநானூறு இலக்கியங்கள் மனித வாழ்வின் நெறிகளை விளக்குகின்றன. இன்றும் கூட மொழிகளைப் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. "மனிதனுடைய மனத்தை வசப்படுத்தும் கலைதான் பேச்சுக்கலை" என்பார் பிளாட்டோ. அப்படிப்பட்ட பேச்சுக்கலையில் நாம் சொப்பும் ஆட்களா? சொற்போர் செய்யும் ஆட்களா? என்று யோசித்துப் பார்த்திருக்கிறோமா? சிறப்பாகப் பேசும் கலை மிகவும் சிக்கலானது. மற்ற கலைகளைப்போல் அதிலும் பழகித்தான் கற்றுக்கொள்ள முடியும். எந்த ஒரு மரபும் பயிற்சியின்றி எண்ணத்தில் கலப்பதில்லை. "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" - என்பது போல்.

"ஒரு வார்த்தை பிரளயத்தையே ஏற்படுத்தக் கூடியது" என்பது பின்லாந்து நாட்டின் பழமொழி.

"அஜாக்கிரதையாகச் சொல்லப்பட்ட சொல் சண்டையைத் துவக்கும். அடாவடியாக பேச ஆரம்பிப்பது அவமானத்தில் முடியும்."

"குரூரம் நிறைந்த வார்த்தைகள் உயிரையே அழிக்கும்."


"தயை நிறைந்த சொல் பாதையை சீராக்கும். சந்தோஷம் நிறைந்த சொல் உற்சாகத்தைத் தரும். இதமான வார்த்தைகள் மனக்கவலையையும், சஞ்சலத்தையும் அகற்றும். அன்பான ஒருசொல் ஆறுதலை தரும். மரியாதைக் குறைவான பேச்சில் ஆணவம் வெளிப்படும்."

ஆகவே பேச்சை ஒரு பலம் வாய்ந்த சக்தியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், உரையாடல் ஒவ்வொரிவரின் எண்ணங்களையும், திறமைகளையும் பிரதிபலிக்கிறது. நாம் அதிகமாகப் பேசுவதைவிட கேட்கப் பழக வேண்டும். ஆனால் கேட்பதை விட பேசுவதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். கேட்கும்போதுகூட சில நிமிடங்களில் நம் கவனம் சிதறிவிடுகிறது.

நாம் ஒருவரிடம் பேசும்போது நாம் கூறும் கருத்தில் கேட்பவர் 7% தான் கவனம் செலுத்துகிறார். அதே சமயம் நாம் பேசும் பேச்சின் ஒலியின் குரல் எவ்வாறு தொனிக்கிறது என்பதில் 38% கவனம் செலுத்துவார். நாம் எந்த முகபாவத்துடன் பேசுகிறோம் என்பதில் 55% கவனம் செலுத்துகிறோம். இச்செயல்கள் எல்லாம் நம்மை உணராமலேயே செய்யும் செயல்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனால்தான் எதிரே இருப்பவர் பேசும்போது நாம் முழு கவனத்துடன் கேட்க முடிவதில்லை. அறிவாளிகள் அதிகம் பேசுவதில்லை. அப்படியே பேசும்போது எதிராளிக்குக் கேட்கும் ஆர்வம் இருக்கிறதா? அவசியமான விஷயம் குறித்துதான் பேசிக் கொண்டிருக்கிறோமா? என்றெல்லாம் தங்களுக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டே கவனமாக பேசுகிறார்கள். நாமும் அறிவாளிகள்போல் இந்த மேட்டரில் முயற்சித்தால் அறிவாளிபோல் ஆகிவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், நம்முள் பெரும்பான்மையினர் சிந்தனையின் துணைக் கொண்டு அறிவு காட்டும் நெறியில் வாழ்வது கிடையாது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டே வாழ்கின்றோம். மற்றவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தடுமாறி கோபப்படும்போது நாமும் பதிலுக்கு கோபத்தையோ, வெறுப்பையோ காட்டிவிடுகிறோம். பிறரைப் பற்றி தரக்குறைவாகவோ அல்லது வீண் கதைகளையோ சொன்னால் பதிலுக்கு நாமும் பேச ஆரம்பித்து விடுகிறோம். தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது இல்லை. இந்தப் போக்கு உள்ளவர்கள் இன்னும் மனமுதிர்ச்சியை அடையவில்லை என்றுதான் அர்த்தம். (இதற்கு முழு உதாரணம் என்னைக் கூட சொல்லலாம்; உங்களில் பலரும் என்னைப் போல் இருக்கலாம்).

உணர்ச்சிகளால் உந்தப்பட்டு வாழும் மனிதர்களைப் பற்றி பிரெஞ்சு தத்துவஞானி "மான்டெயின்" சொல்கிறார் :

"ஒரு மனிதன் நிகழ்ந்து விட்ட சம்பவத்தால் உணர்ச்சிவசப்பட்டு புண்படுவதை விட, சம்பவத்தைப் பற்றி தான் கொள்ளுகின்ற அபிப்பிராயத்தாலேயே புண்படுகிறான். மடுவை மலையாக்காதீர்கள். மற்றவர்கள் உங்களைப் புண்படுத்துவதற்காகப் பேசினால், உங்களை அவமானப்படுத்தவதற்காகப் பேசினால் அவர் நோக்கம் நிறைவேற எதற்காக நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார்".

என்னை கேவலமாகப் பேசிவிட்டானே! மற்றவர்கள் முன் நம்மை அவமானப்படுத்தி விட்டானே! என்று முடங்கிக் கொண்டிருந்தால் என்னாவது? செய்த தவறுகளை இனிவராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குள் எச்சரிக்கை உணர்வை உருவாக்கிக் கொண்டால் மனம் கவலையில் இருந்து மீண்டு விடும். பாதிப்புக்களும் குறைந்து விடும். ஆனால், நமக்கு இந்த மாதிரி சிந்தனை செய்வது கடினமாக இருக்கிறது. உணர்ச்சிகளுக்கு ஆளாவது மிக எளிதாக இருக்கிறது. இந்தப் போக்கிலேயே நாம் வாழ்ந்தும் உணர்ச்சிகளை வழிகாட்டிகளாகவும் வைத்துக் கொண்டிருந்தோமானால் எதையும் சாதித்து விட முடியாது.

கோபங்கள், விவாதங்கள், விமர்சனங்கள், பொறாமைகள், அற்ப ஆசைகள், அழுகைகள் இவற்றிலேயே நம் வாழ்நாள் முழுவதும் ஓடிவிடும். "அழுகை பேச்சின் பிரதிநிதி" என்று "ஃப்ரீட்ஸ்கான்" என்ற ஜெர்மன் டாக்கர் சொல்லுவார்.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருநிலை மூளைக்கு ஏற்பட்டு விடுகிறது. தனக்கு அக்கிரமம் நடந்து விட்டதாக உணரும்போதும் அல்லது நம் தவறுகளை மறைக்க முற்படும் போதும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துக்கம் நம்மை ஆட்கொள்ளும் போதும், அத்தகைய சூழ்நிலைகளைச் சமாளித்து மற்றவருக்கு தன் மனநிலையைக் காட்ட மூளை பயன்படுத்தும் செயல்தான் அழுகை என்கிறார். பல சந்தர்ப்பங்களில் சொற்களை விட அழுகைகள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அநேக பெண்கள் இந்த யுக்திகளைத்தான் கையாளுகிறார்கள். இப்படிப்பட்ட பலவீனப் பழக்கங்களை மாற்ற வேண்டுமானால் நாம் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் பழக்கத்தை மாற்றி நம் சிந்தனை சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இக்கட்டான சூழ்நிலைகளில் நம் உள்ளத்தில் பொங்கி எழுகின்ற உணர்ச்சிகளே நமது அறிவை மழுங்கடித்துச் சிந்தனை சக்தியை அழித்து விடுகிறது. நம்மிடம் உணர்ச்சிகள் ஏற்படும்போது அதன் தாக்கங்கள் குறையும் வரையிலும் பேசாமல் அமைதியாக இருந்து பழக்கப்படுத்திக் கொண்டால் நாளடைவில் நம்மைப் பக்குவப்பட வைத்துவிடுகிறது.

"பக்குவம் என்பது அனுபவத்தால் வருகிறது. நடந்து போய் விட்ட சம்பவங்களைக் குறித்து அவை சரியா? தவறா? என்ற ஆராய்ச்சியில் பேசிக் கொண்டிருப்பது வீண் வேலை. அவைகளைப் புரிந்துக் கொள்வதும் அவைகளிலிருந்து அனுபவம் பெறுவதுமே பயன் அளிக்கும்" என்கிறார் காந்தி. (இங்கே காந்தியின் வாக்கியங்களின் முக்கியத்துவத்தை மட்டுமே சுட்டுக்காட்டுகிறேன். ஆனால் இதற்கு நேர்றையான நடத்தை கொண்டவர் மகாத்மா.)

வாயைப் பொறுத்த அளவில் உணர்ச்சி வசப்படும்போதுதான் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முட்டாளின் இதயம் அவன் வாயில் உள்ளது. ஆனால் "அறிவாளியின் வாய் அவன் இதயத்தில்" உள்ளது. என்று ஓர் பொன் பொழி உண்டு. செய்வதறியாது, பேசுவதறியாது, குழம்பிப் போயிருக்கும் நிலைகளில் எல்லாம் வார்த்தைகள் நமக்கு தாறுமாறாக அடாவடித்தனமாகத்தான் வரும். இந்த வார்த்தைகள்தான் பின்னர் வருந்தும்படியான சூழ்நிலையை உண்டாக்கும். நம்முடைய வாயில் வார்த்தைகள் இருக்கும்போது அவை நமக்குச் சொந்தம். ஒருமுறை பேசப்பட்டபோது அது மற்றொருவருக்குச் சொந்தம்.

"பெஞ்சமின் பிராங்க்ளின்" என்ற அறிஞர் சொல்வார் :

"தேவை இல்லாதபோது வாயை மூடிக் கொள்ளுங்கள். சரியான சந்தர்ப்பம் வந்தால் சொல்லுங்கள். சொல்வதை தீவிரமாகச் சொல்லுங்கள்."

- தமிழச்சி



Monday, July 6, 2009

தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம்...


Thuvarakaகாரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை.

முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத “தமிழ் இனப் பேரெழுச்சி’ உலகெங்கும் கண்ணுக்குப் புலப்படாத மின் ஆற்றல் போல் உருவாகி வருகிறது. யதார்த்தத்தில் எவரும் அறி விக்காமலேயே ஐந்தாவது ஈழப்போர் ஆரம்பித்து விட்டது. மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் வென்றது உண்மையென்றால் இந்தப் போர் தமிழ் ஈழம் காணாமல் ஓயாது. ஆனால் தமிழரிடையே இன்று எழுந்துள்ள இவ்வுணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் அழுக்கான திரைமறைவு செய்மதி யுத்தமொன்றை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

இந்த யுத்தத்திற்கு மும்முனை இலக்குகள். ஒன்று தமிழர்களுக்குள் -குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவுகளை கூர்மைப்படுத்துவது, இரண்டாவது உளப்பரப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது தமிழ் மக்கள் வனைந்திருக்கும் பெருமதிப்பை குலைத்து தமிழ் தேசிய உணர்வெழுச்சியை பலவீனப்படுத்துவது. மூன்றாவது மரண முகாம்களில் வாடும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர் மீதான நமது கூர்த்த கவனத்தையும், இன அழித்தல் குற்றச்சாட்டில் நாம் செலுத்தும் உறுதியான செயற்பாட்டையும் திசை திருப்புவது.

“பிரபாகரன் பொட்டு அம்மானால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?’ “பொட்டு அம்மான் ராணுவப் பிடியில் இருக்கிறார்’, “பிரபாகரன் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டு கோடாரியால் தலையில் வெட்டப் பட்டார்’ பிரபாகரனது கண்களுக்கு முன் அவரது அன்பு மகன் சார்லஸ் ஆன்டணி கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்” என்றெல்லாம் வரத் தொடங்கியிருக்கிற செய்திகள் இந்த அழுக்கு யுத்தத்தின் அருவருப்பான உத்திகள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இருப்பினை குறித்து விவாதித்த காலத்தை நாம் கடந்து விட்டோம். அதைச்சுற்றிய கேள்வி களுக்கான பதிலை காலம் எப்போது வேண்டுமானாலும் தரட்டும். நமது இலட்சியமோ தலைவனோடு களமாடிய ஆயிரமாயிரம் தியாகக் கண்மணிகளின் கனவான தமிழீழம். அத்தோடு இன அழித்தல் செய்த பாவிகளுக்கு நாம் வழங்க வேண்டிய நீதி. இவைதான் இன்றைய கருத்தாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும்.

2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை சந்தித்தபோது, “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டேன். இக் கேள்விக்குப் பதில் சொன்னபோது இனம் புரியாததோர் சாந்தம் அவர் முகத்தில் படர்ந்ததை இப்போதும் என்னால் நினைவுபடுத்த முடிகிறது. “”அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார். உள்ளுணர்வுக்குப் பிடிபடும் தூயதோர் நேர்மை அவர் பதில் கூறுகையிலேயே என் மனதில் பதிந்ததை இன்றும் மறவாது பாதுகாத்து வைத்துள்ளேன்.

அவரது அன்பு மகன் 24 வயதே ஆன சார்லஸ் ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா வெளி நாட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டதாகத்தான் முதலில் செய்திகள் வந்தன. அண்மையில் கிடைத்துள்ள செய்திகளின்படி, 22 வயதே ஆன அவரது ஆசை மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்த சூழலை அறிந்த போது வேதனையில் விம்முவதா, பெருமிதத்தில் சிலிர்ப்பதா என்று தெரியாமல் தவித்து நின்றேன்.

சார்லஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபா கரனோடு இருந்த அவரின் நம்பிக் கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளி களிடம் “”என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்” என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.

தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக் காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.

உண்மையில் சார்லஸ் சண்டைக் களத்திற்குரிய பிள்ளையே அல்ல அது ஒரு சாக்லெட் குழந்தை என்றே அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். தலைவர் முகாமில் இருக்கிறவரை பயிற்சிகளில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறியதுமே “நீ போய் படுத்துக்கோ தம்பி’ என்று அனுப்பிவைக்கும் தளபதிமார் தான் சார்லசுக்கு அதிகம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.

துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது. முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.

உண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருந்திருக்கிறார்.

ஆனால் அகன்றே தீரவேண்டுமென தளபதியர்கள் வற்புறுத்தியபோது சார்லஸ் காட்டுக்குள் நிற்கிறான்.

“”தன்னையும் மகனையும் காப் பாற்றிக்கொண்டு “போராளிகளையும் மக்க ளையும் அழிவுக்குக் கொடுத்தான்’ என்ற வரலாற்றுப் பழி என்னைச் சேரவிடமாட்டேன்” என்றிருக்கிறார். “”அப்படியானால் சார்லஸை களத்திற்கு அழைத்து வருகிறோம்” என்று தளபதியர் உறுதி கூறிய பின்னரே முல்லைத்தீவை விட்டு அகலும் முடிவினை பரிசீலிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். எளிய மொழியில் சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தை பாதுகாக்க வேண்டி தந்தையிடமே அவரது அன்பு மகனின் உயிரை தளபதியர் விலைபேசினார்கள் என்பதே உண்மை. தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்க வில்லையென உரத்துச் சொல், மதர்ப்புடன் பெருமிதம் கொள்.

மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.

காலை 10 மணியளவில் சார்லஸும் 10.40 மணியளவில் துவாரகாவும் வீரமரணம் தழுவினர். 12 மணியளவில் செயற்கைக்கோள் தொலைபேசியில் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசிய பிரபாகரன், “”என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா…” என்றிருக்கிறார்.

விடுதலைக்காய் வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்று வேண்டிய தலைவன், தனது பிள்ளைகள் இரண்டை தியாக வேள்விக்குத் தந்த வரலாறு புனிதமாய், காவியமாய், வேதமாய், எமது வரலாற்றின் முடிவிலா காலங்களுக்கும் உயிர்த்துடிப்புடனும் தலைமுறைகள் மெய்சிலிர்க்கும் ஆன்மீகப் பரவசமாயும் தொடரும்.

நன்றி நக்கீரன்