கமல் ஹாஸன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட விரைவில் நடைபெறவிருக்கும் 'திரை உலகில் கமல் ஐம்பது' எனும் விழா நடக்கு உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமல் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அவரது வீடியோ உரை திரையிட்டுக் காட்டப்பட்டது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
"50 வருட தனி மனித சாதனை என்று யாரும் தவறாக கருதகூடாது. இது என்னுடைய ஆசை. இதை நிறைவேற்றி வைத்தவர்கள் பலர். இது ஒரு கூட்டு முயற்சியின் விளைவு. இதை இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கான பயிற்சியும், பாதுகாப்பையும், பணத்தையும் கொடுத்து உதவியவர்கள்தான் என்னுடைய இன்றைய நிலையின் பங்களார்கள்.
ஏவி.எம்.செட்டியாரில் இருந்து சண்முகம் அண்ணாச்சி, இயக்குநர் கே.பாலசந்தர் இன்னும் பல திரை நண்பர்கள், நண்பர்களாகவே இருந்து ரகசியமாக எனக்கு ஆசனாக இருந்த பலர். இன்றைக்கு எல்லோர் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய இந்த ஒரு சாதாரண நிகழ்வை பெரிய கொண்டாட்டமாக செய்ய முன் வந்தவர்களுக்கு நன்றிகள்.
இதில் என் சக சினிமா நண்பர்களும் கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் இல்லாத போதும் என்னை பற்றி மற்றவர்களுக்கு நல்ல செய்திகளை சொன்னவர்கள். நான் சறுக்கிய போது எனது பிழைகளைக் கண்டு கொக்கரிக்காமல் வருத்தப்பட்டவர்கள் என எல்லோருக்கும் நன்றிகள்.
என்னைப் பற்றி இவர்கள் கூற போகும் கூறிக் கொண்டிருக்கும் பெருமைகளுக்குத் தகுதியுடையவனாக நான் இனிமேல்தான் ஆக வேண்டும் என்ற கடமையுணர்வு எனக்கு இருக்கிறது. இது பணிவல்ல நிஜம்.
பிழை திருத்திய பத்திரிகையாளர்கள்!
என் பிழை திருத்தி பாதுகாத்த சிறப்பு பத்திரிகையளார்களுக்கு உண்டு. எனது தவறுகளை வலிக்காமல் எனக்கு சுட்டிக்காட்டும் பல நல்ல விமர்சகர்களைஇன்றைக்கும் நான் மறக்காமல் இருப்பதற்கு காரணம் நான் கடமைப்பட்டிருப்பதுதான். அவர்கள் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.
இந்த ஒரு நிகழ்வை நான் ஏதோ ஒரு உச்சக்கட்டமாகவோ அல்லது நிறைவாகவோ நினைக்கவில்லை. இது என் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது திடீரென்று இது நடந்து விட்டது என்று சொல்கிறீர்கள் என்று கேட்கும் போது எந்த விதமான ஆயத்தமோ, ஒத்திகையோ இல்லாமல் வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நேரம்.
வார்த்தை சரளமாக வருவது போல் இருந்தாலும் விஷயம் ஒன்றும் இல்லை. இனி செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வளவு நாள் சோம்பேறியாக இருந்து இருக்கிறோமே என்று நினைவுப்படுத்தும் ஒரு மார்னிங் அலார்ம்மாகத்தான் இதை நான் எடுத்து கொள்கிறேன். இதை ஒரு சாயங்காலமாக நான் நினைக்கவில்லை...', என்றார் கமல்.