Thursday, June 18, 2009

புனரபி ஜனனம், புனரபி மரணம்..

ராணிப்பேட்டை ரங்கன்காலை 9 மணி. சென்னை மாநகரின் புற
First Published : 18 Jun 2009 01:25:00 AM IST


காலை 9 மணி. சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதி. ரயில் நிலையத்தை நோக்கி மக்கள் ஓட்டமும், நடையுமாக விரைந்து கொண்டிருந்தனர். மிகவும் முன்னேறிய நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்றவற்றில்கூட இப்படி வேலைக்கு ஓடும் சுறுசுறுப்பான மக்களை உலகம் பார்த்திராது!

அதிலும் ரயில்வே கேட் மூடியிருந்தால், ""இனி ஒரு விநாடி இங்கிருந்தால்கூட சர்வதேசப் பிரச்னை ஒன்று தீர்க்கப்படாமல் போய்விடும்'' என்ற அடக்க முடியாத ஆத்திரத்தோடு "டூ வீலர்'களையும், மனைவி மக்களையும் கம்பிக்கு அடியில் வளைத்தும் இழுத்தும் கடந்துபோகும் சாகசம் இருக்கிறதே, அப்பா -நேரில் பார்த்தால்தான் தெரியும் ""காலம் பொன் போன்றது'' என்பதை எப்படி இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்று.

இந்த நிலையில்தான், பி.டி. உஷா வேகம் இல்லை என்றாலும் நானும் அவர்களோடு சேர்ந்து புறநகர் மின்ரயில் நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். ஜில்பா தலையும் காது கடுக்கனுமாக ஒரு இளைஞன் ஏதோ கூவிக்கொண்டு எதிரில் வந்தான். ""பத்து ரூபாய்க்கு 3 ஃபவுண்டன் பேனா'' விளம்பரமாக இருக்கும் என்று அலட்சியமாகக் கருதி அவனையும் கடந்து ஓடினேன். ""ஆவடியிலே ஓ.எச். (மின்சார வயர்) அறுந்துபோச்சு, ரயில் எல்லாம் லேட்டு'' என்று அடுத்த முறை அவன் கத்தியது தெளிவாகக் காதில் விழுந்தது. ஒரே ஓவரில் 3 விக்கெட் சரிவதைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகனைப்போல அதிர்ந்து, திரும்பிப் பார்த்தேன். அவன் ""ஆமாம்'' என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டிவிட்டு விலகினான். ""அப்படியானால் இவர்கள்?'' என்ற கேள்விக்குறியுடன், எனக்கு முன்னால் ஓடினவர்களைப் பார்த்தேன். அவர்களும் எதிரில் திரும்பும் கும்பல் சொல்வதைக் கேட்டு திட்டியபடியே திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருமாக பஸ் பிடித்து சென்னை போய்ச் சேருவதற்காக நெடுஞ்சாலைக்கு விரைந்தோம். அங்கே சாலையைக் கடக்க முடியாதபடிக்கு, ஏராளமான ஷேர் ஆட்டோக்கள். "ஆவடிக்கு எவ்ளோபா?' என்று கேட்டவரிடம், "ஒரு ஆளுக்கு 15 ரூபாய்தான்' என்று முடிந்தவரை ப. சிதம்பரம் அளவுக்குப் பணிவாகப் பதில் சொன்னான் ஆட்டோக்காரன். "நீங்க நாசமாப் போக' என்று அவர்களை வாழ்த்தியபடியே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர் தோளில் ஒரு பை, கையில் ஒரு பை என்று (ஒன்றில் டிஃபன், ஒன்றில் சாப்பாடு) சுமையோடு பஸ் நிலையம் நோக்கி ஓடினார்.

எம்.டி.எச். சாலையில் எந்த வாகனமும் சமனமாக நிற்க முடியாத சாய்வான மேட்டுப் பகுதிதான் எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்ட். (ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது). அங்கு நிற்கும்போதே பல பெரியவர்கள் தலைசுற்றி விழுந்து "ஸ்ட்ரோக் வார்டு' போயிருக்கிறார்கள். அந்த இடத்தை அடைந்தபோது பஸ் போய்விட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டை ஒட்டிய "டிரைவ்-இன்' டீக்கடைக்காரரை எல்லோரும் பார்த்து, "அடுத்த பஸ் எப்போது வரும்?' என்று கோரஸôகக் கேட்டனர். தாற்காலிகமாக எம்.டி.சி. டைம்கீப்பர் பொறுப்பையும் கெüரவமாக ஏற்ற அவர், "எப்ப வரும்னு யாரால சொல்ல முடியும்?' என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எம்.டி.சி. டைம் கீப்பராக இருந்தால் இதையே "சொள்'ளென்று எரிந்து விழுந்தபடியே சொல்லியிருப்பார். (அதற்குத்தான் அவருக்கு சம்பளம் தரப்படுகிறது.) இவர் பாவம் கெüரவ கீப்பர்தானே, சிரித்தார். கேட்டவர்களோ காரணம் இல்லாமல் அவர் மீது எரிந்து விழுந்தனர். "எப்ப வரும்னு தெரிஞ்சா சொல்லுங்க, இந்த பதில் எங்களுக்குத் தெரியாதா?' என்றனர்.

திடீரென எல்லோரும் மெüனமாகி சில விநாடிகள் சும்மா இருந்துவிட்டு மீண்டும் உரத்த குரலில் பேச ஆரம்பித்தனர். அதற்குள் கூட்டமும் அதிகமானது.

"சி.எல்.லாம் எடுத்துட்டேன் சரஸ்வதி, இல்லன்னா இன்னிக்கு லீவு போட்டிருப்பேன்' என்று பாதி அழுகையும், பாதி ஆத்திரமுமாக மின்வாரிய ஊழியை ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தாள். "உங்க நாத்தனாருதான் ஸ்கூட்டி வெச்சிருக்காளே, அவளுக்கு "செல்' பண்ணி வரச்சொல்லி போலாமில்லையா?' என்று சேதுசமுத்திர திட்டத்துக்கு மாற்று வழி கண்டுபிடித்ததைப்போல சொன்னாள் அவளுடைய தோழி.

"ஐயே, அந்த குரங்கோடயா? எவ போவா அந்த லூúஸôட?' என்று தன்னுடைய கணவனுடைய தங்கையை அந்த இக்கட்டிலும் வாயாரப் புகழ்ந்தாள் அந்த பெண் அரசு ஊழியர்.

"ரயில் ஓடாதுன்னா ஷேர் ஆட்டோக்காரனுக்கு மூக்குலே வேர்க்குது வர்றான், எம்.டி.சி. நிர்வாகம் எருமை மாட்டு முதுகிலே மழை பெய்ஞ்சாப்ல இருக்குதே சார்' என்று அங்கலாய்த்தார் தலைமைச் செயலகப் பிரிவு அதிகாரி ஒருவர். அரசு வேலை கிடைக்காத ஆத்திரத்தில், எப்போதும் அவரைக் காலை வாருவதையே உப தொழிலாகக் கொண்டிருந்த அவருடைய நண்பர், "ஆமா, நீங்க எப்பவும் ஜனங்க கஷ்டத்தைப் பார்த்துத்தான் உடனே உடனே காரியம் பண்ணி கிழிக்கிறீங்க, எம்.டி.சி.யைக் குறை சொல்ல வந்துட்டீங்க' என்று எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார்.

"இங்க பாரு, புரியாம பேசாத; எங்க செக்ஷன்ல ஆபிசரு வரலைன்னா நானே தபாலெல்லாம் பிரிச்சு பார்த்து, யார் யார் கிட்டே சேர்க்கணுமோ கரெக்டா சேர்த்துட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பேன்' என்று ""அரசு நிர்வாக ரகசியத்தை'' ஓரளவுக்குக் கசியவிட்டார் அவர்.

பொதுப்பணித்துறையில் எஸ்.ஓ.வாக இருக்கும் ஒரு அதிகாரி, ""முக்கியமான ஃபைல் ஒண்ணு கையெழுத்துக்கு வெக்கணும் இல்லைன்னா, நான் லீவு போட்டுடுவேன்'' என்று மின்வாரிய அம்மாவைப் பார்த்துக் கூறினார். (அவர் கூறியபடி அது ஃபைல் அல்ல, ஒரு காண்ட்ராக்டர் என்று அவருடைய மனசாட்சி குத்திக்காட்டியது).

"ரயில் ஓட ஆரம்பிச்சிடுச்சாம், கால் அவர்ல எல்லாம் சரியாயிடும்' என்று "செல்' பேசிக்கொண்டிருந்த ஒரு "அரை டிக்கெட்' கூறியதும், மூட்டுவலி, குதிகால் நோவு எல்லாவற்றையும் மறந்து எல்லோரும் மீண்டும் ரயில் நிலையம் நோக்கி ஓட ஆரம்பித்தோம்.

எங்கிருந்தோ கேசட் ஓங்கி ஒலித்தது, ""புனரபி ஜனனம், புனரபி மரணம்...''
dinamani.com/