Tuesday, September 15, 2009

சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை'

சென்னை: 'இலங்கைத் தூதரகத்திடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துவிட்டார்கள் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் சிலர்' என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர் தமிழகத்தின் முன்னணி செய்தியாளர் அமைப்பு.

ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகள், இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தியாளர் திசநாயகத்துக்கு இலங்கை
நீதிமன்றம் [^] வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் 'Save Tamil' என்னும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களால் இக்கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திசநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை உடனடியாக ரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும், சிங்கள அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும் இந்தியாவின் முன்னணி செய்தியாளர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்ச்செல்வம் பேசியதாவது:

"சார்க் அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது அப்போதையபாகிஸ்தான்அதிபர் ஜியா உல் ஹக்கைச் சந்தித்தார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தன. அப்போது அவரிடம் ஜியா, "உங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை நான் படித்தேன். உலகில் வேறு எந்த நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இல்லாத அளவுக்கு கட்டற்ற சுதந்திரம் உங்களின் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோரும் என்னை சர்வாதிகாரி என்கிறார்கள். உங்களை ஜனநாயகவாதி என்கிறார்கள்" என்றாராம்.

இதற்கு என்னிடம் ஆதாரம்கூட இருக்கிறது. அன்று ஜியா சுட்டிக்காட்டிய அதிகாரக் குவியமே இன்றுவரை இலங்கையில் சிறுபான்மை மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இன்றைய நீதித்துறையில் முற்போக்காளராக தோற்றமளிக்கும் சில்வா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதுதான் இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவித்தார்.

நீதித்துறையும் சர்வாதிகார இலங்கை அரசும் இணைந்து பயணித்து வந்ததன் விளைவே திசநாயகம் கைது. நாம் எல்லாம் திசநாயகத்துக்காய் குரல் எழுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் இது குறித்து அக்கறையற்றவர்களாக இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை என்றார்.

மீண்டும் ஒரு ஈழப்போர்!:

'ஹெட்லைன்ஸ் டுடே' தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம் பேசியதாவது:

கேள்விகளற்ற நிலைதான் என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இலங்கை போராட்டங்களை நாம் காந்தீய வழிகளில் முன்னெடுக்க முடியும். நாம் 'ஏர் லங்கா' அலுவலத்தில் போய் அங்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கொடுக்கிற பணத்தில் பெரும்பங்கு போருக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே 'ஏர் லங்கா'வில் பயணம் செய்யாமல் வேறு வானூர்தி சேவைகளை நாடுங்கள் என்று இலங்கையில் வர்த்தக நலன்களை பாதிக்கிற அளவுக்கு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இன்றைய இலங்கை அரசு இனி ஈழ மக்கள் எழ மாட்டார்கள் என நினைக்கிறது. நான் அங்கே எஞ்சியுள்ள போராளிகளோடும் தமிழ் மக்களோடும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் தங்கள் மக்கள் கொல்லப்படுவதையும் முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதையும் இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப்
போராட்டம் [^] முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைகள் மீண்டும் ஒரு ஈழப் போரை அந்த மண்ணில் உருவாக்கும் என்பது அந்த மக்களிடம் பேசிய மன நிலையிலிருந்து தெரிகிறது.

இந்திய அரசைப் பொறுத்தவரையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எழுந்த நெருக்கடிகளுக்காகச் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக நடந்து கொண்டது.

நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லி விட்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு போரை முட்டுக்கொடுத்தும் நடத்தியதும் இந்தியாதான்.

இந்த அதிருப்தி எல்லோருக்குமே இருக்கிறது குறிப்பாக தமிழர்களான உங்களுக்கும் இருக்கிறது. திசநாயகம் கைதுக்காக மட்டுமல்ல ஒரு பெரிய போராட்டத்தையே இன்று நாம் ஜனநாயகத்துக்காய் நடத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என்றார்.

'தி வீக்' இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன்:

இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவற்றுக்கு மதிப்பளிக்கும் மனநிலையில் ஆளும் தரப்பில்லை.

ஆனால் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்கிற சூழலில் ஏதோ சாதித்து முடித்து விட்ட மாதிரி இங்கே அமைதியாக இருக்கிறார்கள்.

என்னதான் நாம் பேசினாலும் எழுதினாலும் தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லை என்றால் இலங்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. மக்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராட முன்வரவேண்டும் என்றார்.

மூத்த எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான தேவசகாயம் பேசிகையில்,

தென் ஆபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகளைக் கொண்டுவந்த போதும் தென் ஆபிரிக்கா அசைந்து கொடுக்கவில்லை.

ஆனால், அனைத்துலக விளையாட்டுக்கள் எதையும் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கிற வரை தென் ஆபிரிக்காவில் நடத்தப் போவதில்லை என்று உலக நாடுகள் முடிவு எடுத்த பின்புதான் அது தன் நிறவெறிக் கொள்கையை மறு பரீசிலனை செய்தது. அதுபோல இலங்கையில்
கிரிக்கெட் [^]உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறா வண்ணம் நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு நாம் காட்டும் எதிர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றார்.

இந்திய- தமிழக உளவுத் துறை சதி...

'டெக்கான் குரோனிக்கல்' நாளேட்டின் செய்தியாளர் பீர் முகம்மது பேசுகையில்,

அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் எலின் சாண்டஸ் இலங்கையில் உள்ள முகாம்களை ஜெர்மனியின் நாஜி முகாம்களோடு ஒப்பிட்டுள்ளார்.

அவர் வரும் 15 ஆம் நாள் தொடங்கி 20 ஆம் நாள் வரை இனப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்காக அவர் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகத்தில் விசாவும் பெற்றிருந்தார். ஆனால் தனது பிரச்சார பயணம் தொடர்பாக
தமிழ்நாடு [^] காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால், அவருக்கு பத்து நாட்களாக அதற்கான காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதோடு இந்த பத்து நாட்களில் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருந்த விசாவை ரத்தும் செய்து விட்டது.

இதிலிருந்து தமிழ்நாட்டு காவல்துறையும் இந்திய உளவுத் த்துறையும் எப்படியெல்லாம் ஈழ மக்களுக்காக இங்கே பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்கே இருக்கிற மாநில முதல்வரோ அங்கே சுமூக நிலை நிலவுகிறது என்கிறார். இது வேதனையான பேச்சு என்றார்.

ஆங்கில ஊடகங்களுக்கு அக்கறையில்லை...

'நக்கீரன்' இதழின் உதவி ஆசிரியர் லெனின் பேசுகையில்,

போர் நடந்தபோது தமிழ் ஊடகவியலாளர்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடினார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார்கள்.

உண்மையில் அவர்கள் நினைத்திருந்தல் இலங்கை விவகாரத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில ஊடகவிலாளர்கள் இன்னும் அதிக கவனம் எடுத்து இலங்கை விவாகரத்தில் செயல்பட வேண்டும் என்றார்.

'இலங்கை தூதரகத்தின் கைக்கூலிகள்...'

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், இலங்கையில் உண்மைக்காக பேசிய ஊடகவியளார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உண்மை பேசக்கூடாது என்பதற்காக இலங்கை தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்களுக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்து விட்டார்கள். பல நேரங்களில் இதை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.

தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இப்படி என்றால்... ஆங்கில ஊடகங்களோ தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது ஒரு போரையே தொடுத்தன.

இலங்கை அங்கே தமிழர்களைக் கொன்றார்கள். இங்குள்ள ஆங்கில ஊடகவியளார்களோ போரின் முடிவை பெரும் வெற்றியாக கொண்டாடினார்கள்.

ஆனாலும் இலங்கை அரசின் அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகப் பேசவும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிற மன நிம்மதி இருக்கிறது என்றார்.